திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ம் நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை திருமலையில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து உற்சவரான மலையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
4 மாட வீதிகளில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 21 பிரிவுகளைச் சார்ந்த 551 நடனக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களையும் தேவஸ்தான அதிகாரிகளையும் வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, இரவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் சர்வ பூபாள வாகனத்தில் எழுந்தருளினார். பிரம்மோற்சவ வாகன சேவைகளிலேயே அதிக எடை கொண்டது சர்வ பூபாள வாகனமாகும். இரவில் நடந்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று கருட சேவை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்றிரவு கருட சேவை நடைபெற உள்ளது.