திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் பாதுகாப்பு எனும் பெயரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், இதனால் சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் வரை நடக்க விடுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று 6-வது நாளை எட்டியது. புரட்டாசி மாதமும் பிறந்து விட்டதால் பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே உள்ளது. கருட சேவையை முன்னிட்டு சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வழக்கத்திற்கு மாறாக பைக், டாக்ஸி, கார்களை அனுமதிக்காமல் கெடுபிடிகளை விதித்தனர்.
இவர்களை மதியம் 1 மணியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்க வில்லை. இதனால் அலிபிரி கருடன் சிலை அருகே போலீஸார், பக்தர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
நேரடியாக சர்வ தரிசனம்
பிரம்மோற்சவம் என்பதால் மூலவரை தரிசனம் செய்ய விஐபி தரிசனம், முதியோர், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளை கொண்டு வருவோர் என அனைத்து சிறப்பு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும், திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் நிறுத்தி விட்டது.
இதனால் திருமலையில் எவ்வித டிக்கெட்களும் இன்றி நேரடியாக பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு செல்லலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால், சர்வ தரிசனம் செல்ல பல கி.மீ. தூரம் வரை நடந்து, நடந்து பக்தர்கள் கால் வலியால் அவதிப்படுகின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் சென்று சுவாமியை தரிசிக்க 2 மணி நேரம் போதும்.
ஆனால், வெளியிலிருந்து சுமார் 6 கி.மீ. தூரம் வரை சுற்றிச் சுற்றி நடந்து, வைகுண்டம் காம்ப்ளக்ஸுக்குள் நுழைந்து அங்கிருந்து மேலும் 2 அல்லது 3 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று தற்போது சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விஐபி பக்தர்கள் மட்டும் சற்று தூரம் நடந்து சென்று சுவாமியை தரிசிக்கின்றனர். ஆனால் சாமானிய பக்தன் 8 கி.மீ. தூரம் வரை நடந்து செல்ல வேண்டுமா? என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.