இந்தியா

கொரிய ஆன்லைன் கேமுக்கு அடிமையான உ.பி.யை சேர்ந்த 3 சகோதரிகள் தற்கொலை

சிறுமிகளின் விபரீத முடிவால் காஜியாபாத்தில் சோகம்

வெற்றி மயிலோன்

காஜியாபாத்: கொரிய ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள், உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஜியாபாத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மூன்று மகள்கள் ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு தீவிர அடிமையாகி இருந்தனர். இதில் 16 வயதுடைய சிறுமி வர்த்தகரின் முதல் மனைவிக்கும், 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் வர்த்தகரின் இரண்டாம் மனைவிக்கும் பிறந்தவர்கள். இவர்களின் வீடு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் உள்ளது.

          

இவர்கள் மூவரும் நாள்ளிரவுக்குப் பின் புதன்கிழமை 12.30 மணியளவில், வீட்டின் பூஜை அறைக்குச் சென்று உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டனர். அதன் பிறகு, அவர்கள் நாற்காலியின் மீது ஏறி ஜன்னல் வழியாக ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் தரை தளத்தில் இருந்த காவலர்களும், அக்கம்பக்கத்தினரும் சத்தம் கேட்டு எழுந்தனர். ஒன்பதாவது மாடியில் இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எழுந்தனர். உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என்று காஜியாபாத் உதவி காவல் ஆணையர் அதுல் குமார் சிங் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “அந்தச் சிறுமிகள் தங்கள் டைரியில் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அதில் அவர்கள் தங்கள் தற்கொலைக்காக வருத்தம் தெரிவித்திருந்தனர். ஒரு அழுகின்ற ஸ்மைலியையும் வரைந்திருந்தனர். டைரிக் குறிப்புகள் மூலம் அவர்கள் கொரிய ஆன்லைன் விளையாட்டில் மிகவும் வெறி கொண்டிருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் தாங்கள் இந்தியர்கள் அல்ல, கொரியர்கள் என்று நினைத்தார்கள். அந்த ஆன்லைன் விளையாட்டின் தாக்கத்தால், தங்களை கொரிய இளவரசிகளாகவே அவர்கள் நினைத்துக் கொண்டனர். அவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்து விவரங்களைத் திரட்டப் போகிறோம்.

ஆன்லைன் விளையாட்டால் அச்சிறுமிகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அவர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களது குடும்பத்தினருக்கு இந்த அடிமைத்தனம் பற்றித் தெரியும். ஆன்லைன் விளையாட்டை அன்றாட வாழ்க்கைப் பழக்கவழக்கங்களில் ஒன்றாகவே அவர்கள் பின்பற்றினர். அச்சிறுமிகள் கழிப்பறைக்குக்கூட ஒன்றாகவே சென்றனர்” என்றார் காஜியாபாத் உதவி காவல் ஆணையர் அதுல் குமார் சிங்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் 022-25521111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மனநல ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
SCROLL FOR NEXT