பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

 
இந்தியா

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியம்

மோகன் கணபதி

புதுடெல்லி: பஞ்சாப்பின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

குன்வர் விஜய் பிரதாப் சிங், ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேத்தன் சிங் ஜவுராமஞ்ரா ஆகிய மூவரும் டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியில் இணைந்தனர்.

பஞ்​சாபில் 117 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்​ரவரி​யில் தேர்​தல் நடை​பெறும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. இதை முன்னிட்டு, ஆம் ஆத்மி சார்பில் 40 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் நேற்று முன்தினம் (அக். 31) வெளியிடப்பட்டது. தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

முதல்​வர் பகவந்த் மான், துரி தொகுதி​யில் மீண்​டும் போட்​டி​யிட உள்​ளார். சபாநாயகர் குல்​தார் சிங் சந்த்​வான், கோட்​கபுரா தொகுதி​யில் போட்​டி​யிட உள்​ளார்.

இந்தப் பட்டியல் வெளியானதை அடுத்து, சமானா தொகுதி எம்எல்ஏவான சேத்தன் சிங் ஜவுராமஜ்ரா, சனூர் தொகுதி எம்எல்ஏவான ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா ஆகிய இருவரும் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று விலகினர். இதையடுத்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான குன்வர் விஜய் பிரதாப் சிங் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து மூவரும் பாஜகவில் இணைந்துள்ளனர். 2022 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே தாங்கள் விலகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான குற்றச்சாட்டு காரணமாக பிற கட்சிகளில் இருந்து வெளியேறிய அல்லது நீக்கப்பட்டவர்களை பாஜக இணைத்துக்கொள்வதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதன்மை செய்தித் தொடர்பாளரும் எம்எல்ஏவுமான குல்தீப் சிங் தாலிவால், “ஆம் ஆத்மி கட்சி எப்போதும் பஞ்சாபின் நலன்களுக்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது சொந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதே கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பாஜகவோ, கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ள முயல்கிறது.” என குற்றம் சாட்டியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT