எம்.டி. செட்டெபெல்லோ கப்பல்
புதுடெல்லி: ஓமன் அருகே அமெரிக்க படையினரால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.டி. செட்டெபெல்லோ கப்பலில் பணிபுரிந்த 3 மாலுமிகள் காணமால் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானாந்த சோனாவால் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆரம்பத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்திய மாலுமிகள் மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இது நமது கடல்சார் சமூகத்துக்கு ஒரு பேரிழப்பு. கடினமான இந்த தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் மோடி அரசு உறுதியாக நிற்கிறது.
அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க விரைவாகக் கொண்டு வருமாறும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படை மூலம் அப்பகுதியை முற்றுகையிட்டது. இதன்மூலம், ஈரான் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பது தடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சில நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஓமன் கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த பலாவு நாட்டின் கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை அந்தக் கப்பல் மீறியதாகவும், அமெரிக்க படைகளின் உத்தரவுகளை கப்பல் ஊழியர்கள் தொடர்ந்து புறக்கணித்ததாகவும், இதன் காரணமாக அந்தக் கப்பலின் இயந்திர அறையை அமெரிக்க விமானம் துல்லியமாக தாக்கியதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு நேற்று (புதன்கிழமை) தெரிவித்தது.
இந்தத் தாக்குதலுக்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் தூதரகப் பொறுப்பாளரை நேரில் வரவழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஓமன் கடற்கரைக்கு அருகே செட்டெபெல்லோ என்ற வர்த்தக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 24 இந்திய பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மூவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அந்த மூவரும் உயிரிழந்ததை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் உறுதிப்படுத்தி உள்ளார்.