கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணைகள், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. படங்கள்: பிடிஐ
சந்திப்பூர்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகள் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பிரிட்டன், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) உள்ளன. இந்த வகை ஏவுகணைகள், பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே செல்லும். பின்னர் வளிமண்டலத்தில் இருந்து பூமிக்குள் அதிவேகமாக மீண்டும் நுழைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும்.
இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் நாடுகளிடம் மட்டுமே ஐசிபிஎம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தடுப்பு ஏவுகணைகள் உள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கடந்த 10, 11-ம் தேதிகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த 3 சோதனைகளும் முழு வெற்றி அடைந்துள்ளன. இவற்றில் ஒரு ஏவுகணை பூமிக்கு வெளியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மற்றொன்று பூமிக்குள் வந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்கும். மூன்றாவது போர்க் கப்பல்களை இடைமறித்து அழிக்கும் வல்லமை படைத்தது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘உலகில் சில நாடுகளிடம் மட்டுமே ஐசிபிஎம் ஏவுகணைகளை அழிக்கும் திறன் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. புதிய சாதனையைப் படைத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தியப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்குச் சீனாவும் பாகிஸ்தானும் அச்சுறுத்தலாக உள்ளன. இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. பொதுவாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) மூலம் அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஐசிபிஎம் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ஏவுகணை திட்டத்தைக் கடந்த 1999-ம் ஆண்டில் டிஆர்டிஓ தொடங்கியது. பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 2000-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து ஸ்வார்டுபிஷ் என்ற அதிநவீன ரேடார் வாங்கப்பட்டது.
இஸ்ரேல் அனுமதியுடன் இந்த ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் 1,500 முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையிலான எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஒரே நேரத்தில் 200 ஏவுகணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக டிஆர்டிஓ சார்பில் ஏடி1, ஏடி2 ஆகிய பெயர்களில் பிஎம்டி தடுப்பு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஸ்வார்டுபிஷ் ரேடார் மற்றும் பிஎம்டி ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும். தற்போது நடத்தப்பட்டு உள்ள சோதனைகள் மூலம் 5,000 கி.மீ. தொலைவில் இருக்கும் ஐசிபிஎம் ஏவுகணைகளை அழிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது.
4 அடுக்கு வான் பாதுகாப்பு: எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணை தாக்குதலை முறியடிக்க விமானப் படை சார்பில் 4 அடுக்கு வான் பாதுகாப்புக் கவசம் அமைக்கப்படுகிறது. முதல்கட்ட வான் பாதுகாப்பில், எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க இஸ்ரேல் தயாரிப்பான பைதன், டெர்பி ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.
இரண்டாவது அடுக்கில் எதிரிகளின் குறுகிய தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க பராக்-8 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். மூன்றாவது அடுக்கில் எதிரிகளின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நடுவானில் அழிக்க ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். நான்காவது அடுக்கில் எதிரிகளின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழிக்க பிஎம்டி ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். இந்த வகை ஏவுகணைகள் மூலம் பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே எதிரிகளின் ஏவுகணைகள் தகர்க்கப்படும். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊக்கத்தொகை, உணவு வழங்கி 11 கிராம மக்கள் வெளியேற்றம்
இந்த சோதனைகள் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம், சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சந்திப்பூர் தளத்தில் அக்னி, பிருத்வி, பிரம்மோஸ் ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது சுற்று வட்டார கிராம மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.
இதேபோல டிஆர்டிஓவின் பிஎம்டி ரக ஏவுகணை சோதனைகளுக்காகச் சில நாட்களுக்கு முன்பு சந்திப்பூர் சுற்றுவட்டாரத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தங்குமிடம், குடிநீர், உணவுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.