லக்னோ: தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்னங்களை அவமதிப்போர், இந்தியாவில் வாழ முடியாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் சந்திரசேகர் ஆசாத், ராணி லட்சுமிபாய், உதா தேவி உள்ளிட்ட பெரும்பாலான சுதந்திரப் போராட்ட தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
இதன் பிறகு அனைத்து சுதந்திர போராட்டத் தலைவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது 140 கோடி இந்தியர்களும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்கின்றனர். தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்னங்கள், தேசிய தலைவர்களை அவமதிப்போர், இந்தியாவில் வாழ முடியாது. வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோர் தற்போது சமூக வலைதளங்களில் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க அவர்கள் தீவிர முயற்சி செய்கின்றனர். அவர்களின் சதிகளை முறியடிக்க வேண்டும்.