இந்தியா

“நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராததற்கு காரணம் இதுதான்...” - ராகுல் காந்தி ‘விமர்சன’ விவரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: சாணக்கியர் என்றும், சர்தார் வல்லபாய் படேல் என்றும் அழைக்கப்பட்ட அமித் ஷா, 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கே வரமுடியவில்லை. ஏனென்றால், அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலை உணர்கிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி தனது உரையில், “நீங்கள் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போராடும்போது எனக்கு சற்று பயமாக இருக்கிறது என்று சொன்னால் அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நீங்கள் ஒரு கோமாளிக் கூட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் எப்படி உங்களுக்கு பயம் வர முடியும்?

இவர்களுக்கு இந்தியா பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால், இன்றைய இந்தியாவோடு ஒன்றிணைந்து செயல்பட முடியாத ஒருவரால் இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது.

இந்தியாவைப் புரிந்துகொள்ள 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை மட்டும் பார்த்தால் போதாது. இன்றைய இந்தியாவை, இந்த தருணத்தில் உள்ள இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய இந்தியாவை புரிந்துகொள்வதற்கான ஒரே வழி, அது வெளிப்படுத்துவதை புரிந்துகொள்வதுதான்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு பெருநிறுவன சக்திகளால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதோ மறைந்துவிட்டது. உண்மையில் ஆர்எஸ்எஸ் என்பது, சிறு வணிகர்கள், பொற்கொல்லர்கள், நகை வியாபாரிகள் ஆகியோரின் குரலாகத்தான் இருந்தது. அதுதான் ஆர்எஸ்எஸ். அந்த ஆர்எஸ்எஸ் அழிந்துவிட்டது. ஓர் உண்மையான சக்தியாக ஆர்எஸ்எஸ் இறந்துவிட்டது. இப்போது அது பெரு நிறுவன மூலதனத்தின் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது.

எங்கள் பணி மிகவும் எளிமையானது. நாங்கள் அவர்களை நிலைகுலையச் செய்ய முடியும். நரேந்திர மோடிக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. வெளிப்படையான காரணம் ஒன்று உள்ளது. மறைமுகக் காரணங்கள் பல உள்ளன.

சாணக்கியர் என்றும், சர்தார் படேல் என்றும் அவர்கள் அமித் ஷாவை அழைத்தார்கள். ஆனால், அந்த அமித் ஷாவால் 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கு வர முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலையும் வெளிப்பாட்டையும் உணர்கிறார்கள். அதோடு, இந்த நாடு இனி தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதை நிறுத்தாது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்துவிட்டார்கள்

ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது? மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பினர். அவர்கள் மிகுந்த வேதனையில் இருந்தனர். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றனர். ஆனால், அரசாங்கமோ, ஜந்தர் மந்தரில் நாங்கள் ஒரு ஒழுங்கை நிலைநாட்டப் போகிறோம். நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என்று கூறியது.

இன்று ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தராகண்ட்டில் அவரது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பகிர்ந்துகொள்ள முயனறார். ஆனால், அதிகார அமைப்போ, நீங்கள் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள அனுமதிக்க மாட்டோம். ஏனெனில், நீங்கள் அவ்வாறு செய்தால் அது ஒழுங்கின்மையை உருவாக்கும். என்று கூறியது.

இந்தியா மீது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கை திணிப்பதே அவர்களின் பணியாகவும் அரசியல் தத்துவமாகவும் உள்ளது. அந்த ஒழுங்கு அவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான ஒரு சில நபர்களுக்கும் மட்டுமே பயனளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்தியா தனது கருத்துக்களை வெளிப்படுத்த வைப்பதும், அந்த ஒழுங்கை உடைப்பதுமே எங்கள் பணி.” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT