இந்தியா

‘‘இதுதான் அமைப்பின் சக்தி’’ - ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு திக்விஜய் சிங் புகழாரம்

மோகன் கணபதி

புதுடெல்லி: “தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் (நரேந்திர மோடி), மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு முன்பாக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். ‘‘குவாரா தளம். இது என்னை மிகவும் ஈர்த்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிமட்ட சுவயம்சேவக், ஜன சங்கம் மற்றும் பாஜகவின் தொண்டர், எவ்வாறு தலைவர்களின் காலடியில் அமர்ந்து மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என அவர் தனது பதவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவில், பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, திக்விஜய் சிங்கின் பதிவை டேக் செய்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் முதல் குடும்பம் எப்படி இரக்கமின்றி சர்வாதிகார முறையில் கட்சியை நடத்துகிறது என்பதையும், காங்கிரஸ் தலைமை எவ்வளவு சர்வாதிகாரமாகவும் ஜனநாயக விரோதமாகவும் இருக்கிறது என்பதையும் அதிர்ச்சியூட்டும் உண்மை வெடிகுண்டை வீசி திக்விஜய் சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் தைரியம் ராகுல் காந்திக்கு உண்டா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

திக்விஜய் சிங்கின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த திக்விஜய் சிங், ‘‘நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். அதேநேரத்தில், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் நான் பாராட்டியுள்ளேன். நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா?’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT