இந்தியா

“மோடி ஜி, இது இந்தியா... வட கொரியா அல்ல!” - இளைஞர் காங். நிர்வாகிகள் கைதுக்கு ராகுல் கண்டனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘இது இந்தியா; வட கொரியா அல்ல’ என்று பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டுக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தாங்கள் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்றி மத்திய அரசுக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் மூவரை கைது செய்வதற்காக டெல்லி போலீசார், இமாச்சலப் பிரதேச தலைநகர் ஷிம்லா சென்றனர். அப்போது, டெல்லி போலீசாருக்கும் ஷிம்லா போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. 24 மணி நேரத்துக்கு நீடித்த இந்த மோதல் முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்த மூவரையும் டெல்லி போலீசார் இன்று காலை டெல்லிக்கு அழைத்து வந்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘‘இன்று இந்தியாவில் சமரசம் செய்து கொண்ட ஒரு பிரதமரின் ஆட்சியின் கீழ், அமைதியான போராட்டம் மிகப் பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியா, எதிர்ப்பு தெரிவிப்பதை தேசத்துரோகமாகவும், கேள்விகள் கேட்பதை சதித்திட்டமாகவும் கருதும் திசையில் தள்ளப்படுகிறது.

பிரச்சினை எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக, அரசியலமைப்புக்கு உட்பட்டு குரல் எழுப்பினால் உங்கள் மீது தடியடி, வழக்கு, சிறைத்தண்டனை ஆகியவை கிட்டத்தட்ட உறுதி. வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தங்கள் எதிர்காலத்துக்காக குரல் எழுப்பினர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

நாட்டின் பெருமைமிக்க பெண் மல்யுத்த வீராங்கனைகள், செல்வாக்கு மிக்க பாஜக தலைவர் ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாரபட்சமற்ற விசாரணையைக் கோரினர். அவர்களின் கோரிக்கை இழிவுபடுத்தப்பட்டது, அவர்களின் போராட்டம் அடக்கப்பட்டது, அவர்கள் வீதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒருவருக்கு ஆதரவாக இந்தியா கேட் பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், போராடியவர்கள் கேட்ட நீதி மறுக்கப்பட்டது.

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸார் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் நச்சுக் காற்றுக்கு எதிராக சாதாண மக்கள் குரல் கொடுத்தபோது, சுற்றுச்சூழல் தொடர்பான அந்த கவலைகளும் அரசியல் என்று முத்திரை குத்தப்பட்டு அடக்கப்பட்டது.

விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியபோது அவர்கள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டனர். கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், தண்ணீர் பீரங்கிகள், தடியடிகள் ஆகியவை தொடர்பு சாதனங்களாக மாறின.

தண்ணீருக்காகவும் தங்கள் நிலத்தின் மீதான உரிமைக்காகவும் பழங்குடியினர் குரல் கொடுத்தபோது, உரிமையைக் கோருவது ஒரு குற்றம் என்பதுபோல அவர்களும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர்.

இது என்ன வகையான ஜனநாயகம்? சமரசம் செய்து கொண்ட பிரதமர் கேள்விகளுக்கு அஞ்சுகிறார். கருத்து வேறுபாடுகளை அடக்குவது இங்கே வழக்கமாகி வருகிறது.

அமைதியான போராட்டம் ஒரு குற்றமல்ல - அது ஜனநாயகத்தின் ஆன்மா. கேள்விகள் கேட்பது ஜனநாயகத்தின் பலவீனம் அல்ல - அது அதன் பலம். அரசாங்கம் விமர்சனங்களைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்போது, பொறுப்பேற்கும்போது ஜனநாயகம் பலப்படுத்தப்படுகிறது.

மோடி ஜி, இது இந்தியா, வட கொரியா அல்ல. அரசாங்கம் தன்னை தேசமாகவும், கருத்து வேறுபாட்டை எதிரியாகவும் கருதத் தொடங்கும்போது ஜனநாயகம் இறந்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT