புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி சந்தித்துக் கொண்டதை வரவேற்ற காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ‘ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.
சமீபத்தில் முடிவடைந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலின் போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மம்தானி இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று அவர்கள் சந்தித்து நட்புடன் பேசிக்கொண்டனர்.
ட்ரம்ப் - மம்தானி சந்திப்பின் காணொளியை பகிர்ந்துள்ள சசி தரூர், ‘ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும். இந்தியாவில் இதை இன்னும் அதிகமாக காண விரும்புகிறேன்.
தேர்தல்களில் உங்கள் கருத்துக்காக எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் தீவிரத்துடன் போராடுங்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் நீங்கள் உரையாட வேண்டும். நீங்கள் இருவரும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ள நாட்டின் பொதுவான நலன்களுக்காக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவில் இதை இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புகிறேன். மேலும் எனது பங்கைச் செய்ய முயற்சிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
சசி தரூரின் கருத்துகள் குறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வெளியிட்ட பதிவில், "சசி தரூர் மீண்டும் ஒருமுறை காங்கிரஸுக்கு ‘இந்தியாவே முதன்மை’ என்று நினைவூட்டுகிறார். ஜனநாயக ரீதியாக நடந்துகொள்ள வேண்டும். தோல்வியுற்றவர்களைப் போல நடந்துகொள்ள கூடாது. ஆனால் ராகுல் காந்திக்கு இந்தச் செய்தி புரியுமா? சசி தரூர் மீது இன்னும் ஒரு ஃபத்வா போடப்படுகிறதா?" என்று கேள்வியெழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க வெளிநாடுகளுக்கு சென்ற எம்.பிக்கள் குழுக்களுக்கு சசி தரூர் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து, அவ்வப்போது பிரதமர் மோடியை ஆதரித்து பேசிவரும் சசி தரூரின் கருத்துகள் பலவும் காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.