இந்தியா

“வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டியதில்லை” - பினராயி விஜயன்

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்பதில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும். அதோடு, அந்தப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் 16வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் புதிய அரசை பாராட்டிப் பேசினார்.

இதையடுத்து, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர் உரையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கேரளா கோரிப்பெற வேண்டிய பல உரிமைகள் உள்ளன. அவை குறித்து மாநில அரசு மவுனம் சாதித்துள்ளது. மாநிலத்துக்கான மத்திய அரசின் நிதிசார் அணுகுமுறை குறித்தும் ஆளுநர் உரையில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. நீலப் பொருளாதார திட்டம் இங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. மாநிலக் கருவூலம் ஒப்படைக்கப்பட்டபோது அதில் ரூ.5,429 கோடி உபரித் தொகை கையிருப்பில் இருந்தது.

வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை என்பது முன்பே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும். அவ்வாறு பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் கூட இல்லை. வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். பதவியேற்பு விழாவின்போது அப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அது நடந்திருக்கக்கூடாது. அந்த அனுபவத்துக்குப் பிறகு மாநில அரசு ஒரு கடுமையான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்த விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சரியான நிலைப்பாடு” என தெரிவித்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்​கில் கேரள முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று முன்தினம் (மே 27) சோதனை நடத்​தி​யது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பினராயி விஜயன், “எனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது நான் வீட்டில்தான் இருந்தேன். ஆனால், யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை” என தெரிவித்தார்.

முதல்வர் வி.டி. சதீசன் இது குறித்துப் பேசாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதல்வர் ஏன் இதற்கு பதில் அளிக்கவில்லை என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். பாஜக அல்லாத பிற கட்சிகளுக்கு எதிராக பாஜக அரசு எப்போதும் கடுமையான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அக்கட்சி எதிர்வினையாற்றுகிறது. ஆனால், மு.க. ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு யதார்த்த நிலைக்கு ஏற்றது அல்ல. காங்கிரஸ் தலைமை குறுகிய மனப்பான்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது. வீணாவின் (பினராயி விஜயனின் மகள்) வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், செய்திகளில் வெளிவருவது போல அவருக்கு பல வங்கிகளில் கணக்குகள் இல்லை” என்று தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து வீணாவின் 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT