கோலாபூர் (மகாராஷ்டிரா): ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு சிவசேனா மட்டுமே உள்ளது என தெரிவித்த அமித் ஷா, சிவசேனாவில் வேறு பிரிவு இல்லை என கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் கோலாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “மகாராஷ்டிராவின் இந்த புனித பூமியில் அம்பாபாய் அம்மனின் இருப்பிடம் உள்ளது. தற்போது மகாராஷ்டிர அரசு இந்த கோயிலை புதுப்பிக்கும் பணியிலும், நடைபாதை கட்டுமானப் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு நடைபாதை கட்டுமானம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஒரு காலத்தில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும், பிரதமராக பதவியேற்ற கடந்த 12 ஆண்டுகளில் நரேந்திர மோடி சாத்தியப்படுத்தி உள்ளார். எனது இளமைப் பருவத்தின்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாது என்றே பல பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், இன்று அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் காவி கொடியுடன் நிமிர்ந்து நிற்கிறது.
காசி விஸ்வநாத், கேதார்நாத், பத்ரிநாத், சோம்நாத் ஆகிய கோயில்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளன. காமாக்யா தேவி கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது, அம்பாபாய் கோயில் புனரமைப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கலாச்சார மறுமலர்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் அனைத்து ஜோதிர்லிங்கங்கள் மற்றும் சக்தி பீடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் சோம்நாத் முதல் கங்கா சாகர் வரை நாடு முழுவதும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தி உள்ளன. தற்போது, நாட்டிலேயே அதிக காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். சுதந்திர இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது, இந்த 12 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியின் பொற்காலம், கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக் காலம் என எழுதப்படும். மேலும், பாதுகாப்பான இந்தியாவை கட்டியெழுப்பிய காலம், உலகெங்கிலும் இந்தியா மீது மரியாதை அதிகரித்த காலம் என்பதும் நினைவுகூரப்படும்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம், மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு தங்கள் ஆசீர்வாதத்தை வழங்கி இருக்கிறார்கள். பாஜகவும் நரேந்திர மோடியும் வங்க மக்களுக்கு கடன்பட்டிருக்கிறார்கள். வங்கத்தின் எல்லை வழியாக நடைபெற்று வந்த ஊடுருவல் நிறுத்தப்படும். ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுவார்கள்.
உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்ததை அடுத்து, சிவசேனாவை நாம் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு என கூறினோம். ஆனால், தற்போது பிரிவு என ஏதும் இல்லை. இருப்பது ஒரு சிவசேனா மட்டுமே” என தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியில் இருந்து 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அமித் ஷாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.