இந்தியாவின் பெண் அரசியல் ஆளுமைகளைப் பட்டியலிட்டால் மம்தா பானர்ஜியை தவிர்த்துவிட முடியாது. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுரை எழுதியவர் திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் 2007-ம் ஆண்டு நடந்த நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டம், மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை என்றால், அது மிகையாகாது.
மேற்கு வங்கத்தின் அப்போதைய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அவர் ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், தாய்மண், மக்கள்) என்ற முழக்கம், 2011-ல் அவரை மேற்கு வங்கத்தின் முதல்வராக்கியது. ஒரு ஃபயர் பிராண்ட் அரசியல்வாதியாக உருவெடுத்த அவர், டைம்ஸ் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை அலங்கரித்தார்.
2011 தொடங்கி அடுத்தடுத்து ஆட்சியை தக்கவைத்து மேற்கு வங்க மாநில முதல்வராக ஹார்ட்ரிக்கும் அடித்தார். 4-வது முறையாகவும் அவர் ஆட்சியமைப்பதை அவர் எதிர்பார்த்தார். ஏன் சில கருத்துக் கணிப்புகளும் கூட ‘மம்தா வரலாறு படைப்பார்’ என்றெல்லாம் வரிந்துகட்டி எழுதின.
ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 293 தொகுதிகளில் 215 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் 2026 தேர்தலில் வெறும் 80 இடங்களில்தான் வென்றது. 206 இடங்களுடன் மேற்கு வங்கத்தை கைப்பற்றியது பாஜக.
தேர்தல் வெற்றி, தோல்விகள், ஆட்சி மாற்றங்கள் இயல்பே என்றாலும் கூட இந்த முறை திரிணமூல் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு அக்கட்சிக்குள் நிகழும் சலசலப்புகள் மேற்கு வங்க அரசியல் களத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து காத்திருப்பது என்ன, மம்தா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன, ஒருவேளை திரிணமூல் அதன் தாய்க் கழகமான காங்கிரஸில் இணைக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளை எழுப்பாமல் இல்லை. அதைப் பற்றி சற்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
திரிணமூலுக்குள் கிளர்ச்சி!
தோல்விக்குப் பின்னர் ஓர் இயக்கம் மீண்டெழ வேண்டுமானால், அதன் தலைமையை நோக்கி அத்தனை பேரும் திரள வேண்டும். ஆனால், திரிணமூல் காங்கிரஸில் அது நடக்கவில்லை.
முதலில் மம்தா பானர்ஜி சார்பில் நிறுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் ஷோவந்தேப் சட்டோபாத்யாயவுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றியது மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2007-ல் நந்திகிராம் போராட்டத்தில் மம்தா பானர்ஜி
அடுத்ததாக, திரிணமூல் எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவர்களில் சுமார் 20 பேர் பாஜக தலைமையிலான என்டிஏவில் இணைய விரும்புவதாகவும், மக்களவையில் தங்களை தணி அணியாக கருதுமாறும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் நீட்சியாக இதோ இன்று (ஜூன் 10) திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் தனது மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இப்படியாக, திரிணமூல் கட்சிக்குள் மாநில அளவில் வெடித்த கிளர்ச்சி இப்போது டெல்லி வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் போதாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் ஓவியத்துக்கு கூட பிரபல ஓவியர் உரிமை கோரி ஊடகப் பேட்டிகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். திரும்பிய பக்கமெல்லாம் மம்தாவுக்கு பெரும் பின்னடைவுகளே இருக்கின்றன.
எங்கே சறுக்குகிறது திரிணமூல்?
15 ஆண்டு கால ஆட்சி, மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கட்சி, பிரதமர் மோடிக்கே கடும் சவாலாகத் திகழ்ந்த அரசியல் தலைவர், இண்டியா கூட்டணியின் முக்கியமான முகம் என்றெல்லாம் திகழ்ந்து திரிணமூல் காங்கிரஸை மம்தா கட்டிக் காத்துவர, எங்கே சறுக்கியது திரிணமூல் என்பதையும் ஆராய வேண்டும்.
நெருப்பை தாக்குப் பிடிக்கும் உலோகம் போல் தோல்வியை ஒரு கட்சி தாக்குப் பிடிக்க, அதன் கொள்கை கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி என்ற ஆளுமை அடையாளத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு 15 ஆண்டு காலம் கடத்தியதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
கிட்டத்தட்ட தமிழகத்தில் அதிமுகவுக்கு ஜெயலலிதா என்ற பிராண்ட் வேல்யூவும், அவர் தக்க வைத்திருந்த அரசாட்சியும் போல் திரிணமூல் 15 வருடங்கள் மேற்கு வங்கத்தில் இருந்துள்ளது என்றுகூட ஒப்பீட்டு அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.
அரசியல் வாரிசு மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் மம்தா பானர்ஜி
அதுமட்டுமல்லாது ஒரு மாநிலக் கட்சி, அதன் கரங்களை முழு பலத்தோடு மாநிலத்தின் மூலை முடுக்கு வரை பரவலாக செலுத்த வேண்டுமானால், அதன் அச்சாணி கட்சிக் கட்டமைப்பாக இருக்க வேண்டும். ஆனால், திரிணமூல் கட்சிக்குள் மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் தலைவர்கள் குறுநில மன்னர்களாகிப் போயிருந்தனர். இப்படியான போக்குதான் அரசுக்கு எதிர்ப்பலைகளை உருவாக்கும் என்பதை மம்தா எப்படி கணிக்காமல் போனார் என்று தெரியவில்லை.
தனக்கு அடுத்த அரசியல் வாரிசாக மருமகன் அபிஷேக் பானர்ஜியை மம்தா அடையாளம் காட்டியதும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மாநில அரசியல் கட்சிகள் பலவும் வாரிசு அரசியல் என்ற வீக்னெஸ் கொண்டவையாகவே இருக்கின்றன. அது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, அவற்றைப் பிரித்தாள தோதாகிவிடுகிறது, மகாராஷ்டிராவின் சிவசேனாவில் நடந்ததுபோல.
இவையெல்லாம்தான் திரிணமூல் காங்கிரஸின் சறுக்கல்களுக்கு காரணம் என்று தான் கருதுவதாகக் கூறுகிறார் மேற்கு வங்க அரசியல் பார்வையாளர் ஒருவர்.
பாஜகவின் சாதுர்யம்!
இந்த இடத்தில்தான் பாஜகவின் சாதுர்யத்தையும் நாம் பேச வேண்டியாகிறது. மாநிலக் கட்சிகள் பல தேசிய அரசியலில் அதீத தலையீடு செய்வது, உட்கட்சிக்குள் ஏதேனும் உரசல், விரிசல் என்றால் அதிருப்தியாளர்களுக்கு மத்தியில் ஆளும் கட்சியையும் ஒரு வாய்ப்பாக முன்னிறுத்துகிறது.
மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியல், அதிகாரம், நிதி அதாரங்கள் என்று என்ன வேண்டுமோ செய்து தருகிறோம் என்று அரவணைக்கிறது.
பாஜக 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 3-வது முறையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மாநில அரசியல் களங்களில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு மாநிலக் கட்சிகளின் பலவீனமே சிவப்புக் கம்பளமாகிவிடுகிறது.
மம்தாவின் முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன?
71 வயதான மம்தா பானர்ஜியின் அரசியல் எதிர்காலமும், அவர் 1997-ல் தொடங்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் சோபிக்க, மம்தாவின் முன் சில வாய்ப்புகள் இன்னமும் இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கு மம்தா சொன்னது, “நாங்கள் கட்சியை மீள்கட்டமைப்பு செய்வோம். திரிணமூல் காங்கிரஸ் மக்களுக்கான கட்சி, தலைவர்களுக்கு ஆனது அல்ல” என்பதே.
அதைத்தான் மம்தா பானர்ஜி மெய்ப்பிக்க வேண்டும். அவர் திரிணமூல் கட்சியை மாநில நலன் கொள்கை சார்ந்து அமைப்பு ரீதியாக வலிமையானதாகக் கட்டமைக்க வேண்டும். வாரிசு அரசியலை தவிர்க்க வேண்டும். இதுவரை குறுநில மன்னர்களாக கோலோச்சியவர்களைப் புறக்கணித்து இளம் முகங்களை கட்சிக்குள் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே பரிந்துரைகளாக இருக்கின்றன.
தாய்க் கழகத்துக்கு திரும்புகிறாரா மம்தா?
இது ஒருபுறம் இருக்க, மம்தா பானர்ஜி காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த திரிணமூல் காங்கிரஸை ஆரம்பித்தது போல், இந்தப் படுதோல்விக்குப் பின்னர் தன் கட்சியை தாய்க் கழகமான காங்கிரஸில் இணைக்கப் போகிறாரா என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றன.
இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 8-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மம்தா இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதன்முறை.
கடந்த 8-ம் தேதி இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு வருகை தந்த மம்தா பானர்ஜி
தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை, திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். அபிஷேக் பானர்ஜி மீதான பல்வேறு வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இத்தகையச் சூழலில் மம்தா பானர்ஜியும் டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார். இது வழக்கத்துக்கு மாறானது. மேலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அதன் தேசியத் தலைவர் மாற்றப்படக் கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இவற்றையெல்லாம் கொண்டு மம்தா தனது தாய்க் கட்சிக்கு திரும்பக்கூடும் என்ற ஊகங்கள் இருக்கின்றன. ஆனால், அரசியல் தற்கொலைக்கு சமமான இந்தச் செயலை செய்து, திரிணமூல் காங்கிரஸை கரைப்பதோடு, தனது அரசியல் ஆளுமையையும் மம்தா பானர்ஜி நிச்சயமாக அடகுவைக்க மாட்டார் என்றும் விவாதிக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கையை அல்லாது ஒற்றை நபரின் அரசியல் புகழை மட்டுமே முன்வைத்து வளரும் எந்தவொரு மாநில, தேசிய கட்சிக்கும் இதுபோன்ற நெருக்கடியை ஜனநாயக சக்தி தரும் என்பது மட்டுமே நிதர்சனம்.