இந்தியா

தர்மேந்திர பிரதான் பதவி விலகியது தன்னலமற்ற சேவையின் உயர்ந்த நிலை: பாஜக

மோகன் கணபதி

புதுடெல்லி: பதவியில் இருந்து விலகுவது என்ற தர்மேந்திர பிரதானின் முடிவு, பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையின் வெளிப்பாடு என்று பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய கல்வி அமைச்சராக இந்தியாவின் கல்விச் சூழலை சீரமைப்பதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும், பிற முன்னெடுப்புகளிலும் தர்மேந்திர பிரதான் முக்கிய பங்காற்றினார்.

பரந்த நலன்களை முன்னிறுத்தி அவர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு, பொதுவாழ்வில் நேர்மை மற்றும் சுயநலமற்ற சேவையின் மிக உயர்ந்த தர நிலைகளின் வெளிப்பாடு. இந்த முடிவில், தர்மேந்திர பிரதானுடன் கட்சி உறுதியாக நிற்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிவில், “தர்மேந்திர பிரதானின் உண்மையான தலைமைத்துவம் பல தசாப்தங்களாக அளவிடப்படுகிறது. பொது வாழ்விலும், மாணவர் நலனிலும் ஒருவர் கொண்டுள்ள வாழ்நாள் ஈடுபாட்டுக்கு அவரது பயணம் ஒரு சான்று.

மத்திய அமைச்சரவையில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ள நான், இந்தியாவின் கல்விச் சூழலை வலுப்படுத்துவதிலும், ஒவ்வொரு முடிவிலும் லட்சக்கணக்கான இளம் மாணவர்களை மையமாகக் கொள்வதிலும் அவரது உண்மையான அர்ப்பணிப்பை நான் கண்டுள்ளேன். இத்தகைய துறையை வழிநடத்துவதற்கு அளப்பரிய விடா முயற்சி தேவை. அவர் அதை துணிச்சலுடனும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடனும் ஏற்றுக்கொண்டார்.

தர்மேந்திர பிரதான் அவர்களே, உங்கள் இடைவிடாத சேவைக்கும் சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்புக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்புக்கும் நன்றி. அதே உறுதியுடனும் நேர்மையுடனும் நீங்கள் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினமா, தேசம் முதலில் என்ற பாஜகவின் கொள்கையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடே முதலில்; கட்சி அதற்கடுத்து; தனிநபர் கடைசியாக - இதுவே எங்கள் கொள்கை.

மாணவர் இயக்கத்தில் தொடங்கி மத்திய அரசில் முக்கிய பொறுப்புகளை வகித்தது வரை தர்மேந்திர பிரதான் பல பத்தாண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மக்களுடைய கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பதும், அவர்களின் குரலை மதிப்பதும், தேவைப்படும் தருணத்தில் பொறுப்பேற்கும் துணிச்சலைக் கொண்டிருப்பதும்தான் ஜனநாயகத்தின் உண்மையான பொருள். பதவிகள் தற்காலிகமானவை. மக்களின் நம்பிக்கையே மிக முக்கியம்.

மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகும் முடிவு, பாஜகவின் அமைப்பு கடைப்பிடிக்குமு் விழுமியங்களையே பிரதிபலிக்கிறது. இதுதான் ஜனநாயகம். எப்போதும் நாடே முதலில்.” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT