புதுடெல்லி: அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம்-ல் ஒரே ஒரு இந்துவாக விஜய் உபலே வென்றுள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக உள்ளிட்ட 16 வேட்பாளர்களை தோற்கடித்த இவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த ஒரு இந்து வேட்பாளரான விஜய் உபலே பெற்ற வெற்றி, அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர், மும்பை மாநகராட்சியின் வார்டு எண் 140-இல் போட்டியிட்டிருந்தார்.
இவரை எதிர்த்து 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களை, விஜய் உபலே 4,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் மொத்தம் 25,950 வாக்குகள் பதிவாகின. இதில் உபலே 20 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த வார்டு எண் 140-ல் முஸ்லிம் வாக்காளர்கள் 50 சதவிகிதத்திற்கும் அதிகம். விஜய் உபலே மும்பையின் சோமையா கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர். 2012 முதல் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அவர், தனியாகப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
இந்த வகுப்புகளில் விஜய், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், முதல் ஆண்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், டிப்ளமோ மாணவர்களுக்கும் கணிதம் கற்பிக்கிறார். இதனால், அப்பகுதியின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விஜய் நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.
மும்பை மாநகராட்சியின் வார்டு எண் 140-ன் ஏஐஎஐஎம் தலைவரான தில்ஷாத் அன்சாரி, போட்டியிடும் வாய்ப்பை விஜய்க்கு பெற்றுத் தந்துள்ளார். விஜய் உபலே, தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றபோது அவரால், வழக்கறிஞர் கட்டணத்தைச் செலுத்த ரூ.3,000 இல்லை.
இதனால் அவர் பணத்தைக் கடன் வாங்கி செலுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் வேட்பாளர் விஜயின் எளிமையான மற்றும் ஏழ்மையான நிலையை பிரதிபலித்தது. பிரச்சாரத்திலும் பெரும்பாலும் எளிமையாகவே செய்துள்ளார் விஜய். எனினும், தேர்தலுக்கு சற்று முன்பு நடைபெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பேரணி, விஜய்யின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமானதாகக் கருதப்படுகிறது.
தலைவர் ஒவைசியின் பேரணியில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். இது அப்பகுதி இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சமூக அக்கறை கொண்ட விஜய், கடந்த 2024 மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஏஐஎம்ஐஎம் கட்சியில் இணைந்துள்ளார்.
இது குறித்து வார்டு எண் 140 பகுதியின் ஏஐஎம்ஐஎம் தலைவர்களில் ஒருவரும், ஆசிரியருமான அதீக் கான் கூறுகையில், ’வெற்றி பெற்ற விஜய்க்கு மதம் ஒரு பொருட்டல்ல. அவர் வழக்கறிஞர் அசாதுதீன் ஒவைசியால் ஈர்க்கப்பட்டவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த அவரது அறிவு அதிகம்.’ எனத் தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சியின் வார்டு 140 இரண்டு சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு அஸ்மி தலைமையிலும், மற்றொன்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சனா மாலிக் தலைமையிலும் உள்ளது.
இந்த இரண்டு கட்சிகள் மீதும் 140 வார்டின் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர், மேலும் தங்களின் உள்ளூர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு மூன்றாவது மாற்று வழியை விரும்பினர். எனவே, முஸ்லிம்களுக்கான ஏஐஎம்ஐஎம் கட்சியில் ஒரே ஒரு இந்துவாக விஜய் உபலே வெற்றி பெற்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விட்டது.
ஏனெனில், தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு மத்தியில் தலைமை ஏற்றுள்ள கட்சியான பாஜகவில் கூட முஸ்லிம்கள் தேர்தல் போட்டியிடுவது அரிதாக உள்ளது. மத்திய அமைச்சராக ஒரு முஸ்லிம் கூட அமர்த்தப்படவில்லை. இதன் காரணமாக, ஒவைசி கட்சியின் விஜய் வெற்றிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மகராஷ்டிராவின் உள்ளாட்சி தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. இவற்றில் நகராட்சி தேர்தல் கடந்த டிசம்பரில் முடிந்து விட்டது. இதையடுத்து நடந்த 29 மாநகராட்சிக்கானத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இன்னும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேசமயம், 2024-ல் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனால், மாநகராட்சி தேர்தலில் தம் பலத்தை மீண்டும் நிரூபிக்க பாஜக தீவிரம் காட்டியது. இதன் காரணமாக, எப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை மாநகராட்சி தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதன் முடிவுகளில் ஐதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் மகராஷ்டிரா முழுவதிலும் 144 வார்டுகளில் வென்று கவனம் பெற்றுள்ளது.