மாநிலங்களவையில் ஜெ.பி.நட்டா

 
இந்தியா

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதகமா? - எம்.பி.க்கள் எதிர்ப்பும், நட்டா பதிலும்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு தானாக முன்வந்து விரிவான அறிக்கையை வெளியிடும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் என்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதி அளித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விகளை எழப்பினர்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாக மாற்றும் என ட்ரம்ப் கூறி இருப்பது குறித்தும் அவர்கள் விமர்சித்தனர்.

          

‘அமெரிக்கா உடனான இந்திய வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதகமே’ என விமர்சிக்கும் வகையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, ‘‘அமெரிக்க அதிபர் நேற்று இரவு வரிகள் குறித்து சமூக ஊடக பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் பிரதமர் மோடியை தனது உண்மையான நண்பர் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தும் வர்த்தகம் குறித்தும் குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஓர் அறிக்கையை வெளியிடும். மேலும், இது குறித்து விவாதமும் நடத்தும்’’ என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘‘அரசாங்கம் விரிவான அறிக்கை கொடுக்கத் தயாராக இருக்கும்போது, காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி எம்பிக்களின் இந்த அணுகுமுறை தவறானது. அவர்களின் வழிமுறை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது ஒரு பொறுப்பற்ற நடத்தை. இது அவர்களின் விரக்தியின் வெளிப்பாடு’’ என குற்றம் சாட்டினார்.

முன்னதாக, வரி மற்றும் வரி இல்லாத தடைகளை இந்தியா குறைக்கும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘‘அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இதில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’’ என குற்றம் சாட்டினார்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விற்றுவிட்டார். அவர் கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இதனால், மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.

பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் கடும் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கின்றனர். தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது. அது உண்மையில் பிரதமர் மோடி மீதான வழக்குதான்.

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தங்கள் உள்ளன. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள் என்று நம்புகிறேன். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மகிழ்விக்கவும், சமாதானப்படுத்தவும் அவரிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டார் மோடி” என்று ராகுல் காந்தி கூறினார்.

SCROLL FOR NEXT