புதுடெல்லி: நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதான ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்குமாறு வணிகர் சங்கம் ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், “ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய மோடியிடம் கூறுங்கள். 30 வினாடிகளில் போராட்டங்கள் நின்றுவிடும்” என்று ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘டெல்லியில் உள்ள வணிகர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் நேசிக்கிறோம். உங்கள் குரலைக் கேட்கிறோம். சமீபத்தில் அரசாங்கம் மெட்ரோவை நிறுத்தியது. நமது சாலைகளை மூடியது. இதன்மூலம் தலைநகரை முடக்கியது.
வாக்குகள் திருடப்படுவதால் உங்கள் கடை, உங்கள் சேமிப்பு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என எதுவும் பாதுகாப்பாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டுள்ள 4-வது நபரான ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய மோடியிடம் கூறுங்கள். 30 வினாடிகளில் போராட்டங்கள் நின்றுவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்ஐஆர் முறை நிறுத்தப்பட வேண்டும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் நவ.1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அழைப்பு விடுத்துள்ளார். ‘நவ.1-ம் தேதி டெல்லிக்கு வாருங்கள். ராம்லீலா மைதனத்தில் நடைபெற உள்ள வாக்குகளைக் காப்போம் - தேசத்தைக் காப்போம் என்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளுங்கள்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், தீபாவளி பண்டிகையின் உச்சகட்ட ஷாப்பிங் சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும், எனவே ஆர்ப்பாட்டத்தை நவ.10-ம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்றும் வர்த்தகம் மற்றும் தொழில் சபை அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.