இந்தியா

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தளமாக டெலிகிராம் செயல்படுகிறது: மத்திய அரசு குற்றச்சாட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: நீட் போன்ற கசிந்த தேர்வுத் தாள்களை பரப்புதல், இணையவழி மோசடி, பயங்கரவாதம் தொடர்பான பிரச்சாரம், சிறார் ஆபாசப் படங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தளமாக டெலிகிராம் உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “அச்சுறுத்தும் சக்திகளை இணைக்கும் புதிய கருப்பு இணையமாக டெலிகிராம் மாறியுள்ளது. தவறான இணையதள இணைப்புகளை பதிவிட குற்றவாளிகள் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர். இது, குற்றவாளிகளை கண்காணித்து அடையாளம் காண்பதை அதிகாரிகளுக்கு கடினமானதாக்குகிறது. டெலிகிராமின் தனியுரிமை மற்றும் அடையாளம் மறைப்பு அம்சங்கள், குற்றத்தில் ஈடுபடும் குழுக்களுக்கு சாதகமாக உள்ளன.

டெலிகிராம் பயனர்கள், தனியுரிமை அமைப்புகள் மூலம் தொலைபேசி எண்கள் மற்றும் டெலிகிராம் முகவரி போன்ற அடையாளங்களை மறைக்க முடிகிறது. இதனால், இந்த கணக்குகளுக்கு உரியவர் யார் என்பதை அடையாளம் காண்பது புலனாய்வு பிரிவினருக்கு கடிதனமானதாகிறது. தனியுரிமை அம்சங்கள் காரணமாக போதைப் பொருட் கடத்தல், இணையக் குற்றங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம், குழந்தைகளைச் சுரண்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளால் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்கள், உள்ளடக்கங்கள், தவறான தவகல்கள் போன்றவை டெலிகிராம் குழுக்கள் மற்றும் சேனல்கள் மூலம் பரப்பப்படுகின்றன. இணைய குற்றச் செயல்களுக்கான ஒரு மையமாக டெலிகிராம் மாறியுள்ளது. மோசடிக்காரர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி நிதி மோசடிகளைச் செய்கின்றனர். இணைய மோசடிக்கான ஒரு ஊடகமாக டெலிகிராமை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான புகார்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. சைபர் குற்றம் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பெறுவதற்கும் மாற்றுவதற்கும் டெலிகிராம் சேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சைபர் குற்றங்கள் தொடர்பான கவலைகளைத் தவிர, திருட்டுத்தனமான திரைப்படங்கள், வலைத்தொடர்கள், பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை விநியோகிக்க டெலிகிராம் சேனல்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதோடு, அறிவுசார் சொத்துரிமை குறித்த கவலைகளையும் எழுப்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT