ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா. நிஜாமாபாத் மக்களவை உறுப்பினர், தெலங்கானா மேலவை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக பிஆர்எஸ் கட்சியை விட்டு விலகினார். கடந்த 25-ம் தேதி தெலங்கானா ராஷ்டிர சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். தேர்தல் ஆணையத்தின் பதிவுக்காக 5 பெயர்களை பரிந்துரை செய்திருந்தார். இதில் தெலங்கானா ரக்ஷன சேனா என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து நேற்று கடிதம் வந்துள்ளது.
இதனை கவிதா ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் டிஆர்எஸ் எனும் பெயர் மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியின் இப்பெயர் குறித்து இன்னும் 30 நாட்கள் வரை யாரிடமிருந்தும் எவ்வித ஆட்சேபமும் வரவில்லை எனில், இந்தப் பெயரே கட்சியின் பெயராக அதிகாரப்பூர்வகாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.