பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) செயல் தலைவராக தேஜஸ்வி யாதவை லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். இதை சதி என லாலு மகள் ரோகிணி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பல இடங்களில் தோல்வியடைந்ததால் பின்னடைவை சந்தித்தது. தேர்தல் நேரத்தில் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தெரிவித்த கருத்துக்கள்தான் தோல்விக்கு காரணம் என கருதிய தேஜஸ்வி யாதவ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ரோகிணி ஆச்சார்யா. லாலு வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறினார்.
இந்நிலையில், ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் தேஜஸ்வி யாதவை ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயல் தலைவராக லாலு அறிவித்தார். அப்போது ரப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி மூத்த தலைவர்கள் பலர் உடன் இருந்தனர். இந்த கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எக்ஸ் தளத்தில் ரோகிணி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆர்ஜேடி கட்சியின் கட்டுப்பாடு ஊடுருவல்காரர்கள் மற்றும் சதிகாரர்களின் கையில் சென்று விட்டது. அவர்களின் ஒரே நோக்கம் லாலுவின் கொள்கைகளை ஒழிப்பதுதான். கட்சியின் தலைமையை மாற்றத்துக்கு காரணமானவர்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்த்து சிந்தித்து பார்க்க வேண்டும்.
அடித்தட்டு மக்களுக்காக போராடிய கட்சியின் உண்மையான அதிகாரம் எதிரிகளால் அனுப்பப்பட்ட ஊடுருவல்காரர்கள் மற்றும் சதிகாரர்களின் கையில் உள்ளது. இவர்கள் தங்கள் தீய நோக்கங்களை நிறைவேற்றுவதில் வெற்றியடைந்துள்ளனர். லாலுவின் கொள்கை மற்றும் கட்சி நலன் பற்றி பேசியவர்களை அவர்கள் தாக்கினர். இவ்வாறு ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார்.