தஸ்லிமா நஸ் ரீன் | கோப்புப் படம்
புதுடெல்லி: வங்கதேச தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்று தெரிவித்துள்ள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், அதேநேரத்தில் ஜாமாத் இ இஸ்லாமி தோற்றதில் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேச எழுத்தாளரும், சமூக சேவகருமான தஸ்லிமா நஸ்ரின், வங்கதேச தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்த தேர்தலில் பிஎன்பி வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக, ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய ஜிஹாதி பயங்கரவாத குழு தோற்கடிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர்கள் (ஜமாத் இ இஸ்லாமி) மூர்க்கத்தனமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் பேரணிகளை நடத்தினர், நினைத்தபோதெல்லாம் இரவும் பகலும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர், கொல்ல நினைத்தவர்களை சித்ரவதை செய்து கொன்றனர், இந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர், வாக்குக்காக ஒரு பெண்ணைக்கூட அவர்கள் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கவில்லை.
பெண்களை மிகவும் வெறுக்கும், உழைக்கும் பெண்களை பாலியல் தொழிலாளிகள் என்று அவமதித்த, பெண்களின் தலைமைக்கு எதிராகப் பேசிய, பெண்களை புர்கா மற்றும் நிகாப் இருளில் தள்ளிய, பெண்களை ஆண்களுக்கான பாலியல் அடிமைகளாகப் பார்த்த, பெண்களுக்கு எதிராக ஷரியத் சட்டத்தை அமல்படுத்த கனவு கண்ட ஒரு கட்சி ஜமாத் இ இஸ்லாமி. இவர்களை ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இதுதான் நல்ல செய்தி’’ என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 15 யோசனைகளை தஸ்லிமா நஸ்ரின் முன்வைத்துள்ளார். அதன் விவரம்:
1. ஜூலை 1 சாசனம் ரத்து செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பில் மதச்சார்பின்மை மீட்டெடுக்கப்பட வேண்டும். அரசு மதம் அகற்றப்பட வேண்டும்.
2. மத அடிப்படையிலான குடும்ப சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும். பெண்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சீரான ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
3. பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
4. மதரசா கல்வி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மதச்சார்பற்ற, அறிவியல் அடிப்படையிலான கல்விமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. உலகளாவிய கல்வி மற்றும் சுகாதாரம் அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
6. ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் அவாமி லீக் மீதான தடையை நீக்க வேண்டும்.
7. பொருளாதார வளர்ச்சியுடன், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
8. குடும்ப அரசியல் மற்றும் மத அரசியலை ஊக்குவிக்கக்கூடாது.
9. ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சுதந்திர சிந்தனையாளர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் மீறப்படக்கூடாது. தடைசெய்யப்பட்ட புத்தகங்கள், திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும்.
11. விடுதலைப் போரின் நினைவுச் சிற்பங்கள் மீண்டும் கட்டப்பட வேண்டும்.
12. அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ பெண்களுக்கு ஹிஜாப், புர்கா போன்றவற்றை கட்டாயமாக்கக்கூடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா மற்றும் ஹிஜாப் தடை செய்யப்பட வேண்டும்.
13. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 ஜிஹாதி பயங்கரவாதிகள் மீண்டும் கைது செய்யப்பட வேண்டும்.
14. இந்தியா உடனான விரோத உறவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அரசு மற்றும் மக்களின் நலன்களுக்காக நட்புறவை ஏற்படுத்த வேண்டும்.
15. சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்க வேண்டும். அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவாமி லீக்கின் அனைத்து உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், கலைர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.