இந்தியா

காவிரியில் 17 டிஎம்சி நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காவிரி​யில் தமிழகத்​துக்கு விகி​தாச்​சா​ரப்​படி கிடைக்க வேண்​டிய நீரை உடனடி​யாகத் திறக்க உத்​தர​விட வேண்​டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலி​யுறுத்தி உள்​ளது.

காவிரி நீர் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி தமிழக அரசு தாக்​கல் செய்த நிலை அறிக்​கை​யுடன் கூடிய பிர​மாணப் பத்திரத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில், தமிழகத்தின் பற்​றாக்​குறையை ஈடு​கட்ட விகி​தாச்​சா​ரப்​படி விநாடிக்கு 22,000 கன அடி நீரை அடுத்த 15 நாட்​களுக்​குத் திறக்க வேண்​டும் என வலி​யுறுத்​தப்​பட்​டது.

ஆனால், ஆணை​யம் 15 நாட்​களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர் மட்​டுமே திறக்க உத்​தர​விட்​டது. வறட்​சிக் காலங்​களில் விகி​தாச்​சா​ரப்​படி நீர் திறக்க வேண்​டும் என்ற விதியை ஆணை​யம் பின் பற்​ற​வில்​லை. கடந்த 27-ம் தேதி நில​வரப்​படி கர்​நாடக அணைகளில் 72.961 டிஎம்சி நீர் இருந்​தும், விகி​தாச்​சா​ரப்​படி தமிழகத்​துக்​குரிய நீரைத் திறக்க ஆணை​யம் உத்​தர​விட​வில்​லை.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி, ஜூன் மாதம் முதல் இது​வரை தமிழகத்​துக்கு 80.451 டிஎம்சி நீர் கிடைத்​திருக்க வேண்​டும். வறட்சி​யைக் கருத்​தில் கொண்டு கணக்​கிட்​டாலும் 43.202 டிஎம்சி நீர் கிடைக்க வேண்​டும். ஆனால், இது​வரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்​துள்​ளது. நீர் பற்​றாக்​குறை இருந்​தும், கள நில​வரத்​தைக் கருத்​தில் கொள்​ளாமல் ஆணை​யம் பிறப்​பித்த 9,000 கன அடி நீர் வீதம் 15 நாட்​களுக்கு திறக்க வேண்​டும் என்ற உத்தரவைக்​கூட கர்​நாடகம் முழு​மை​யாகச் செயல்படுத்தவில்லை.

இதனால் காவிரி டெல்டா விவ​சா​யிகளின் குறு​வைச் சாகுபடி கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தமிழகத்​துக்கு விகிதாச்​சா​ரப்​படி கிடைக்க வேண்​டிய நீரைத் திறக்க உரிய உத்​தரவு பிறப்​பிக்​கு​மாறும், குறிப்​பாக பற்​றாக்​குறை​யான 17.604 டிஎம்சி நீரை உடனடி​யாகத் திறக்​கு​மாறும் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்தை வலி​யுறுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் காவிரி நீர் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்றும் சந்​திப் மேத்தா அடங்​கிய அமர்​வில்​ இன்​று விசாரணைக்கு வர உள்​ளது.

SCROLL FOR NEXT