மதுரை: “பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். எனவே, தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும்” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், "நாங்கள் இப்போது நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும்.
ஆரம்ப பள்ளிகளில் மாநில அரசாங்கம் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நாம் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டால், அவர்களே நமது சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக இருப்பார்கள்.
நாங்கள் காசி தமிழ் சங்கமத்தை நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். ராமேஸ்வரத்தில் நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்தினோம். இந்த காசி தமிழ் சங்கமம், நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும், குறிப்பாக காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான ஓர் இணைப்பு மற்றும் நாகரிகப் பிணைப்பாகும். தற்போது பலரும் இதில் பங்கேற்கின்றனர்.
எதிர்காலத்தில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற பின்னணியில், இன்னும் திறமையான ஒரு கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். நமது நாட்டின் இரு பகுதிகளுக்கும் இடையே இந்த மாபெரும் கலாச்சாரப் பாலத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.