இந்தியா

திரிணமூல் மாநிலங்களவை எம்.பி பதவியை துறந்தார் சுஷ்மிதா தேவ்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் தனது மாநிலங்களவை எம்.பி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

தேர்தல் தோல்வி ஒருபுறம் அழுத்த, மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் மேற்கு வங்க சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகின்றனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ரிதப்ரதா பானர்ஜி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.

திரிணமூல் காங்கிரஸின் இந்தக் கிளர்ச்சி இப்போது நாடாளுமன்றம் வரையிலும் பரவியுள்ளது. மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் தற்போது சுஷ்மிதா தேவ் மாநிலங்களவை எம்.பி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது மம்தா தரப்புக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

அசாமின் சில்சார் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தேவ், 2019 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியிலிருந்து விலகி 2021-ல் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அதன்பின்னர் அவர் திரிணமூல் கட்சியின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

இந்தச் சூழலில், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சுஷ்மிதா தேவ் எழுதிய கடிதத்தில், தனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ராஜினாமாவுக்குப் பின்னர் பேசிய சுஷ்மிதா தேவ், “எனது அரசியல் எதிர்காலம் மேற்கு வங்கத்தில் இல்லை, அசாமில்தான் உள்ளது. இந்த முடிவை எடுக்க எனக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான காரணங்கள் உள்ளன. நான் எங்கே, எப்படி அரசியல் செய்கிறேன் என்பது எனது தனிப்பட்ட உரிமை. நான் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் பதவியை விட்டு விலகும்போது, ​​மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் விட்டு விலகுவதே சரியானது.

நான் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டேன். நான் ஏன் விலகினேன் என்பது ஒரு நீண்ட கதை. ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்யும் நிலையில் இருக்க நான் விரும்பவில்லை. மம்தா பானர்ஜி குறித்து நான் கருத்து எதுவும் கூறமாட்டேன்" என்று அவர் கூறினார்.

திடீர் திருப்பமாக, மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பிறகு டெல்லியில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை சுஷ்மிதா தேவ் சந்தித்தார். இதன் காரணமாக அவர் பாஜகவில் இணைவார் என்றும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மக்களவைத் தொகுதி ஒன்றில் சுஷ்மிதா போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT