கோப்புப் படம்
புதுடெல்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு, அனுமதிக்கப்பட்ட 20% வரம்பை தாண்டிவிட்டதா என்பது குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ‘முட்டாள்கள்’ என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் கோபி, “பெட்ரோலில் இயங்கும் வாகனங்களால் ஏற்டும் மாசுபாட்டைக் குறைக்க எத்தனால் கலப்பு மட்டுமே ஒரே வழி. எத்தனால் கலப்பு குறித்தும், அது அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டிவிட்டதா என்பது குறித்தும் தீய அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அத்தகைய நபர்களை நான் மோசமான சொற்களால் அழைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த முட்டாள்களுக்கு அறிவியல் குறித்து எந்த அறிவும் இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் அளவு அனுமதிக்கப்பட்ட 20% வரம்பை தாண்டிவிட்டதாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகா குற்றம் சாட்டியது. கடந்த திங்கள் அன்று இது குறித்துப் பேசிய கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், “பெட்ரோலில் எத்தனால் கலப்பு குறித்து மாநில அரசு ஆய்வு மேற்கொண்டது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு, அனுமதிக்கப்பட்ட 20% வரம்பை தாண்டிவிட்டதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
மாநில அரசு தனது கண்டுபிடிப்புகளில் உறுதியாக உள்ளது. கர்நாடகா முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சேகரிக்கப்பட்ட 63 மாதிரிகளில் உள்ள உண்மையான எத்தனால் அளவை எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும், எண்ணெய் நிறுவனங்களே தங்களுக்குச் சான்றளித்துக்கொள்வதற்குப் பதிலாக, சுதந்திரமான பரிசோதனை அவசியம். மேலும், அனைத்து மாநில அரசுகளும் சொந்தமாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் நாடு தழுவிய அளவில் பரிசோதனைகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவைத் தொடர்ந்து கேரளா, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு, அனுமதிக்கப்பட்ட 20% வரம்பை தாண்டிவிட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.