புதுடெல்லி: கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜாமீனையும் நிறுத்தி வைக்கப்பட்ட ஆயுள் தண்டனை உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதற்கு குல்தீப் சிங் செங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சித்தார்த் தவே, என். ஹரிகரன் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, குல்தீப் சிங் செங்கரின் ஜாமினையும், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்கிறோம். மேலும் இந்த மனு தொடர்பாக குல்தீப் சிங் செங்கர் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.