புதுடெல்லி: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த நிலப்பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுச்சாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுச்சாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2024 ஜூன் 14 அன்று பிறப்பித்த தீர்ப்பில், ‘‘இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களைக் காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறி விட்டது’’ எனக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என 9 பேருக்கும் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பிலும், கொலை செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலையில், மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை. சாட்சியங்களை ஆய்வு செய்யாமல் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து மிகப்பெரிய தவறிழைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு கடும் அதிருப்தி அளிக்கிறது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய்ந்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டுதான் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனையையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையையும் விதித்துள்ளது.
அதைக் கூட உயர் நீதிமன்றம் முறையாக கவனத்தில் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது. அனைவரையும் கூண்டோடு விடுதலை செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே, அந்தத் தீர்ப்பை நாங்கள் ரத்து செய்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அனுமதித்தால் அது தவறான நடைமுறைக்கு வழிவகுத்து விடும்.
மனிதனின் பேராசை எந்த எல்லைக்கும் செல்லும் என்ற ரவீந்திரநாத் தாகூரின் வரிகளுக்கு இந்தக் கொலை வழக்கு சிறந்த உதாரணம். தான் பெற்ற பிள்ளைகளைப் பெற்றோர் எப்போதும் நேசிப்பார்கள். பாசத்தின் மிகுதியால் வயதான காலத்திலும் அவர்கள் செய்யும் செயல்கள் நல்லதா, கெட்டதா என்பதை ஆராயாமல் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பது இல்லை. இந்த வழக்கில் பொன்னுச்சாமியும், அவரது மனைவி மேரி புஷ்பமும் தங்களது மகன்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களின் குற்றச்செயல்களை மன்னிப்பதாகக் கருத்தில் கொள்ளக் கூடாது. மனிதர்களின் செயல்பாடுகளைக் கோடிட்டு காட்டுகிறோம்.
ந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சரியானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வாதிடவில்லை. எனவே, அந்த 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நாங்கள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறோம். அதேநேரம் கீழமை நீதிமன்றம் விதித்த அபராதம் செல்லும். பொன்னுச்சாமியும், அவருடைய மனைவி மேரி புஷ்பமும் தமிழக ஆளுநரிடம் மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கிறோம்.
அவர்களின் மன்னிப்பு மனுவை பரிசீலிக்கும்படி ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறோம். ஆளுநர் பரிசீலிக்கும் வரை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். எனவே விடுதலையாகி வெளியே உள்ள பொன்னுச்சாமி, மேரிபுஷ்பம் தவிர எஞ்சிய 7 பேரும் 2 வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.