புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதித்த ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தர பண மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் காலை 11 முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்ய பக்சி அடங்கிய அமர்வு நேற்று மீ்ண்டும் விசாரித்தது.
செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதற்கான பண மோசடி புகார் விவகாரத்தில் புலன்விசாரணை நிறைவடைந்துவிட்டது. குறிப்பாக, அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிகையும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதால், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் செந்தில் பாலாஜி ஆஜராக வற்புறுத்தக்கூடாது’’ என்று வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோயிப் உசைன் ஆட்சேபம் தெரிவித்து வாதிடும்போது, ‘‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதற்கான பண மோசடி விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டே, செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது’’ என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணனும் ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், மனுதாரர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் டீ அருந்துவது தேவையா? என கேள்வி எழுப்பினர்.
பின்னர், “வாரம் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தேவையில்லை. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம். விசாரணைக்காக அழைக்கும்போது அதில் இருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடைஞ்சலாக செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என அமலாக்கத்துறை தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.