இந்தியா

மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

மோகன் கணபதி

புதுடெல்லி: மேகே​தாட்டு அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு நிராகரித்த நிலை​யில், அந்த உத்​தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் கே.வினோத் சந்​திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வு, ‘மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்’ என கூறி மனுவை நிராகரித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

கர்​நாட​கா​வில் காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்டு அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் அய்​யாக்​கண்ணு உள்​ளிட்​டோர் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

கடந்த 2025 நவ.13-ம் தேதி அப்​போதைய தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் அமர்​வில் இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, ‘கா​விரி​யின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்​டும் கர்​நாடக அரசின் முயற்​சி, காவிரி தீர்ப்பாயத்​தின் உத்​தரவை மீறும் செயலாகும். இத்​திட்​டம் செயல்​பாட்​டுக்கு வந்​தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்’ என்று தமிழக அரசு சார்​பில் வாதிடப்பட்டது.

‘மேகே​தாட்டு அணை திட்​டத்தால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்​கப்​ப​டாது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்​ணீரை வழங்க இத்​திட்​டம் தடை​யாக இருக்​காது’ என்று கர்​நாடக அரசு தரப்​பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “கர்​நாடக அரசின் திட்ட வரைவு அறிக்​கை, காவிரி ஆணை​யம் மற்​றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு​வின் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ளது. அந்த அமைப்​பு​கள் ஒப்​புதல் அளித்​தால் மட்​டுமே வரைவு அறிக்கை ஏற்​கப்​படும் என்று மத்​திய நீர் ஆணை​யம் தெளிவுபடுத்தி உள்​ளது. தவிர, காவிரி வழக்​கின் தீர்ப்பின்படி தண்​ணீரை திறக்க மறுத்​தால் கர்​நாடக அரசு நீதி​மன்ற அவம​திப்​புக்கு உள்​ளாகும்.

மேலும், மேகே​தாட்டு அணைக்​கான விரி​வான திட்ட அறிக்கைக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டால் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம். தற்​போதைய சூழ்​நிலை​யில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்​பட்டு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தால், விசாரணைக்கு ஏற்க முடி​யாது” என்று கூறி, தமிழக அரசின் மனுவை நிராகரித்​தனர்.

இந்நிலையில், இதே காரணங்களைச் சுட்டிக்காட்டி மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

SCROLL FOR NEXT