ஆரவல்லி மலைத் தொடர் | ராஜஸ்தான்

 
இந்தியா

ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

மோகன் கணபதி

புதுடெல்லி: ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய வரையறையை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்க பரிந்துரைத்துள்ளது.

உலகின் மிகவும் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஆரவல்லி மலைத்தொடர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. 100 மீட்டர் அல்லது அதற்கு அதிகமான உயரம் கொண்ட மலைகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கொள்ளப்படும் என்றும், 500 மீட்டருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகள் இருந்தால் மட்டுமே அது ஆரவல்லி மலைத் தொடராக கருதப்படும் என்றும் அரசு நிபுணர் குழு அளித்த வரையறையை உறுதி செய்து கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ராஜஸ்தானில் உள்ள 12,081 ஆரவல்லி மலைகளில் 1,048 மலைகள் மட்டுமே 100 மீட்டர் மற்றும் அதற்கும் அதிக உயரம் கொண்டவை என்றும், இந்த புதிய வரையறையால் குறைவான உயரமுள்ள மலைத் தொடர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை இழக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு சுரங்க நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை இது மேலும் மோசமாக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனது முந்தைய உத்தரவை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், முந்தைய அரசாங்கக் குழுவின் அறிக்கையில், ஒழுங்குமுறை குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியவும், அந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்யவும் ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்கப் போவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை, அனைத்து மலைகள் மற்றும் குன்றுகளின் விரிவான அறிவியல் மற்றும் புவியியல் மதிப்பீடுகள் மற்றும் துல்லியமான அளவீடுகளுக்குப் பின்னரே இறுதி செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜன.21-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

SCROLL FOR NEXT