உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
புதுடெல்லி: டெல்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்களை பாதுகாக்கவும், அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 20-ம் தேதி நடத்திய பேரணியின்போது போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சூழலில் போராட்டத்தை கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மாலியா பக் ஷி, வி.மோகனா அமர்வில் பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர் கூறியதாவது: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். போராட்டத்தில் களமிறக்கப்பட்ட அதிரடி படையினரின் பணி விவரம், வழங்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், அதிரடிப் படையினரை களமிறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பெல்லட் குண்டுகளின் விவரம் உள்ளிட்டவற்றையும், சிசிடிவி பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் விருந்தா குரோவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த காவல் துறையினருக்கு அனுமதி உள்ளது. அதிரடிப்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பான பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.