புதுடெல்லி: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்க மாவட்ட நீதிசார் அலுவலர்களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.
மேற்கு வங்க அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையற்ற நிலையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்தியது. கூடுதலாக ஜார்க்கண்ட், ஒடிசா நீதிசார் அலுவலர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக ஜார்க்கண்ட், ஒடிசா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் கேட்டு பெறவும், இவ்வாறு நியமிக்கப்படும் மாவட்ட நீதிசார் அலுவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கான செலவினங்களை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேற்கு வங்க எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்து பிப்.14-க்கு முன் பெறப்பட்ட கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.
வாக்காளர் இறுதிப் பட்டியலை பிப்.28ல் வெளியிட வேண்டும் என்றும், மேலும் துணை பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்களின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம்பெறும் என்று தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.