புதுடெல்லி: கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா, எஸ்.ஜெயக்குமார், இ.சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்எல்ஏக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதில், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வலுவான காரணமின்றி பதவியை ராஜினமா செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் கே.சுதன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் சார்பில் வழக்கறிஞர் மெர்லின் ரேச்சல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கே.சுதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, மனு மீது பதில் அளிக்க மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநில சட்டமன்றச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார், இ. சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கே.சுதன் தனது மனுவில், ‘இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்கள் கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வாக்களித்தனர். பத்தாவது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ் தகுதியிழப்பு செய்யக்கோரும் மனுக்கள் சபாநாயகரிடம் நிலுவையில் இருந்தபோதே, அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாக்கள் அதே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், அவர்கள் ஆளும் கட்சியிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
மக்கள் இதை விரும்பவில்லை. மரணமோ அல்லது உடல்நலக் குறைவோ இதற்குக் காரணமல்ல. எந்த சட்டமும் அவர்களை ராஜினமா செய்ய வற்புறுத்தவில்லை. கட்சித் தாவலை ஒரு புதிய தேர்தலின் மூலம் சட்டப்பூர்வமானதாக மாற்றிக்கொள்வதே இதன் ஒரே நோக்கம். இதற்கான முழுச் செலவும் பொதுப் பணத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.
ஒரே தொகுதிக்காக வாக்காளர்கள் இருமுறை செலவை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலை உருவாக்கிய எம்எல்ஏக்கள் எந்த செலவையும் ஏற்பதில்லை, எந்த விளைவையும் சந்திப்பதில்லை.
இத்தகைய ராஜினாமாக்காளால் ஏற்படும் ஆபத்துகள், இந்த ஆறு தொகுதிகளுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இத்தகைய செயல் அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையை அர்த்தமற்ற ஒன்றாக மாற்றியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.