இந்தியா

குறையும் கருவுறுதல் விகிதம்: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

மோகன் கணபதி

புதுடெல்லி: கருவுறுதல் விகிதம் குறைந்து வரும் தற்போதைய சூழலில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் அதன் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதிகளில், இரு குழந்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற சட்டங்களின் செல்லுபடித்தன்மை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, தனது தீர்ப்பை இன்று வழங்கியது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 3-ல் இருந்து 1.9 ஆக குறைந்துள்ளது. ஒரு தலைமுறைக்கான முழுமையான மாற்று விகிதம் 2.1 ஆகும். இந்தியாவில் மக்கள்தொகை இன்னும் குறையத் தொடங்கவில்லை என்றாலும், கருவுறுதல் விகிதம் இந்த மாற்று விகிதத்துக்கு கீழே சரிந்திருப்பது, எதிர்காலத்தில் மக்கள் தொகை முதியவர்களை அதிகம் கொண்டதாக மாறுவதற்கும், உழைக்கும் மக்கள் தொகையின் பங்கு குறைவதற்கும் வழிவகுக்கும்.

எனவே, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் தங்கள் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டன. இத்தகைய மக்கள்தொகை மாற்றங்களை கவனத்தில் கொள்ளத் தவறினால், இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இரு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றத் தவறினால் தண்டனைக்கு உள்ளாகும் சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டுமா என்ற சட்டக் கேள்வியை, இந்த அமர்வு கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுகிறது.

இத்தகைய சட்டங்கள் நீடிக்க அனுமதிக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. பொதுப் பதவியை வகிக்கும் திறனுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், இது குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதற்கும் இடையே ஒரு நியாயமற்ற தேர்வை மேற்கொள்ள மக்களை கட்டாயப்படுத்துகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இனப்பெருக்க சுயாட்சி உரிமையை பறிப்பதாக அமைகிறது.’ என்று தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT