திருப்பரங்குன்றம் தீபத்தூண்
கோப்புப் படம்
புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பும் மூன்று நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருமுறை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, வரும் கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) ஒருநாள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஒருமுறை அனுமதி அளிப்பது பின்னாளில் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடக்கூடும் என்பதால் ஏற்படும் அபாயங்களை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. எனினும், உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
அதேசமயம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை ஒரு இன்றியமையாத நடைமுறையாக உறுதி செய்து கடந்த ஜனவரி 6 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இறுதி கருத்துக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
நவம்பர் 24 அன்று தீபம் ஏற்றும் குழுவில் இடம் பெறுபவர்களை கோயில் நிர்வாகம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இந்த நிகழ்வுக்கான பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல் ஆணையர் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்வலங்கள் நடத்தவோ, முழக்கங்களை எழுப்பவோ அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடவோ அனுமதி இல்லை. தீபம் ஏற்றும் இடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தீபம் ஏற்றியவுடன் அந்த குழுவினர் உடனடியாக தீபத்தூண் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அங்கு தற்காலிகமான அல்லது நிரந்தரமான எந்தவொரு அமைப்பையும் விட்டுச்செல்லக்கூடாது.
மலையில் உள்ள தர்கா உட்பட எந்தவொரு மதச் சின்னத்திற்கும் எவ்வித சேதமோ அல்லது மாற்றமோ செய்யக்கூடாது. தர்காவுக்குச் செல்லும் பக்தர்களின் வழிபாடடு உரிமையிலோ அல்லது அவர்கள் தர்காவை பயன்படுத்துவதிலோ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.
தீபத்தூண் மீது விளக்கேற்ற அனுமதிக்கும் இந்த இடைக்கால உத்தரவு யாருக்கும் எந்தவொரு சட்டப்பூர்வமான உரிமையையும் வழங்காது. வரும் ஆண்டுகளில் இதை ஒரு முன்னுதாரணமாகக் கருதக்கூடாது.
மாநில அரசு எழுப்பிய சிக்கல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். நவம்பர் 24 ன்று தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், உடனடி மற்றும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 24ம் தேதிக்கான இந்த அனுமதி, ஒரு இன்றியமையாத மத நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டதாக எவரும் கருதவோ அல்லது முடிவு செய்யவோ கூடாது. வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் தங்கள் மத உரிமைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த நிகழ்வு முடிந்த மூன்று நாட்களுக்குள் இது குறித்த நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2027ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இரு தரப்பும் முன்வைத்த வாதங்கள்:
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் நேற்று முன்தினம் முன்வைத்த வாதத்தில், ‘‘தர்கா அருகே உள்ள கல்தூண் தீபத்தூண் கிடையாது. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலங்களை அளவீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைக் கல்.
தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நில அளவீட்டுக் கற்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணும் இன்று வரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்தூண் பகுதிக்குச் செல்வதற்கான வழி தர்கா நிர்வாகத்துக்குச் சொந்தமானது’’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘‘அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதா, இல்லையா?’’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘‘அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்கிறோம்’’ என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறினார். இந்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் கூறுங்கள்’’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘அந்த இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதுதான்’’ என்று தெரிவித்தார்.
அதன்பின்னர், சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீஃபா அகமதி, ‘‘மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின் காலம் வரையிலான ஆவணங்களில் தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1862 முதல் 1923-ம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய வழிபாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான பகுதி, படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடியேற்றும் பகுதி ஆகியவை தர்காவுக்குச் சொந்தமானவை.
கல் தூணுக்கும் தர்காவுக்கும் 20 மீட்டர் தொலைவுதான் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் எங்களது தரப்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நேற்று (நவ.19) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
நேற்று 3-வது நாள் விசாரணையின்போது, சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி அரங்கநாதன் என்பவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா வாதிடும்போது, “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த, 1862, 1902 ஆகிய ஆண்டுகளில் சிலர் தர்கா அருகில் தீபம் ஏற்ற முயன்றபோது அது தடுக்கப்பட்டது.
இதையடுத்து, 1994-ம் ஆண்டு தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா அருகில் தீபம் ஏற்றுவது மரபு கிடையாது, எனவே கோரிக்கை ஏற்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், தர்கா சார்பில் நெல்லித் தோப்பு பகுதியில் விலங்குகளை பலியிட்டு வழிபட அனுமதிக்க முடியாது. நூற்றாண்டு பழமையான நடைமுறையை மாற்ற முடியாது, கடைபிடிக்கப்படாத புதிய மரபுகளை மத வழிபாடு எனக்கூறி சேர்க்கவும் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், மலையில் உள்ள கோயிலுக்கு அருகேதான் 150 ஆண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகே தீபம் ஏற்றப்பட்ட வரலாறு கிடையாது, எனவே, தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. தற்போது கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் பின்னர் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பார்கள், இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்” என வாதிட்டார்.
ராம ரவிக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் லக் ஷ்மண் ராஜா ஆகியோர், “தர்காவுக்கு படிக்கட்டுகள், கொடிமரம், புது மண்டபம் என அனைத்தையும் சேர்த்து 86 சென்ட் நிலம்தான் சொந்தமாக உள்ளது, ஆனால், கோயிலுக்கு 171.17 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த குறிப்பிட்ட கல்தூண் கோயில் நிலத்தில் அமைந்துள்ளது. அதில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோருகிறோம்.
தற்போது குறிப்பிட்ட கல் தூணில் விளக்கு ஏற்றும் வகையில் குழிவான அமைப்பு இருக்கின்றது அதில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றினால் இரண்டு மணி நேரம் தீபம் அணையாமல் எரியும். தமிழகத்தில் மருதமலை, சுவாமிமலை, பழனி மலை முருகன் கோயில்களிலும் இவ்வாறுதான் தீபம் ஏற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் 2 மணி நேரம் மட்டும் அந்த குறிப்பிட்ட கல்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டு விடப்போகிறது” என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.