புதுடெல்லி: சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சிறார்கள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோகத் தகவல்கள், ஆபாச படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கக் கோரி, ‘ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்டரன் அலையன்ஸ்’ அமைப்பு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
ஏற்கெனவே, இவ்வழக்கில் கடந்த ஆக.14-ம் தேதியே மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும், இதுவரை எவ்வித அறிக்கையும் தாக்கல் செய்யப்படாததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “இன்ஸ்டாகிராம் தளத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தி, டெலிகிராம் சேனல்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யும் அதிர்ச்சித் தகவல் சர்வதேச ஊடக விசாரணையில் வெளிவந்துள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இத்தகைய குற்றங்கள் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளூர் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும். ஆனால், மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்திய சட்டப் பிரிவுகளுக்குத் தெரிவிக்காமல் அமெரிக்க மையங்களுக்கு மட்டுமே புகாரளிக்கின்றன” என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், “மத்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகவே எடுத்துள்ளது. விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என கூறினார்.
இதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், “இது மிகவும் தீவிரமான பிரச்சினை. ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது” என்றனர். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இறுதிவாய்ப்பு வழங்கி கெடு விதித்து, வழக்கின் விசாரணையை அக்.15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.