புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த வெங்கிட சுப்ரமணி மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பின் 124-வது பிரிவின் உட்பிரிவு 2-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, 5 பேரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் இந்திய குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைகிறார்.
நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த நியமனங்களின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 38 எனும் நிலையில், இன்னும் ஒரு நீதிபதிக்கான இடம் மட்டுமே காலியாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலிஜியம் இந்த ஐந்து பெயர்களையும் கடந்த மே 27-ம் தேதி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட 4 நாட்களில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றதை அடுத்து அவரது தலைமையில் கொலிஜியம் மேற்கொண்ட முதல் பரிந்துரை இது என்பது குறிப்பிடத்தக்கது.