புதுடெல்லி: ‘‘தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான (ஐசியூ) வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவதற்கு, செயல் திட்டங்களை தயாரிக்க வேண்டும்’’ என்று அனைத்து மாநிலங்களையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) நோயாளிகளுக்குச் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த ஏப்.20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அசனுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஐசியூ.வில் சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: ஐசியூ.வில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில், முதல் கட்டமாக போதிய ஊழியர்கள் எண்ணிக்கை, அத்தியாவசிய கருவிகள் உட்பட 5 அடிப்படைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஐசியூ.வில் அமல்படுத்த வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை சமர்ப்பித்துள்ளது. அதன் நகல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். அத்துடன், அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர்கள், சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை செயலர்கள் உடனடியாக கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில், ஐசியூ.வில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
ஐசியூ.வில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை விட முக்கியமானது, அந்த செயல் திட்டங்கள் அமல்படுத்துவதை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முதல் கூட்டத்திலேயே உடனடியாக செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்று முதல் (ஏப்.20) ஒரு வாரத்துக்குள் இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
ஐசியூ.வில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால், 24 மணி நேரமும் ஐசியூ.வில் பணியாற்றும் நர்ஸ்கள், நோயாளிகளுக்கு ஏற்படும் எந்த சிக்கலையும் சமாளிக்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும்.
இந்த நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை சமர்ப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளை, மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை மே மாதம் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.