இந்தியா

நீட் மறுதேர்வை கணினி வழியில் நடத்தக் கோரிய மனு - உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: நீட் மறுதேர்வை கணினி வழி முறையில் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்வு முறையை மாற்றுவது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி நிராகரித்தது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ராஜஸ்தான் தனிப்படை போலீஸார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மே 12-ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்தது. பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘பேனா, பேப்பர் நடைமுறையில் நீட் தேர்வு நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வினாத்தாள் கசிவு, முறைகேடுகளைத் தடுக்க வரும் 2027-ம் ஆண்டில் கணினி வழியில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நீட் மறுதேர்வை கணினி முறையில் நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு, ‘நீட் தேர்வை ரத்து செய்த பிறகு என்டிஏ பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுதேர்வை கணினி முறையில் நடத்துவதற்கு தற்போது சாத்தியமே இல்லை’ என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT