உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
இந்தியா

டெல்லியில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

வெற்றி மயிலோன்

புது டெல்லி: டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், பூங்காக்கள், பேருந்துகள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும், இது குறித்து டெல்லி காவல்துறையிடம் விளக்கமும் கோரியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, லேடி ஸ்ரீ ராம் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது, ஸ்வரூப் நகரில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளானது மற்றும் கிரேட்டர் நொய்டாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற பேருந்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டி, இது தொடர்பான விஷயங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த அந்த அமர்வு, “2012-ம் ஆண்டின் நிர்பயா வழக்கோடு இதை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை; அதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொண்டோமா என்ற கேள்வியும் எழுகிறது. பொதுப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் இருந்தபோதிலும், தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன. வன்முறையற்ற, கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் ஒரு அடிப்படை உத்தரவாதமாகும்.

மேற்கூறிய சம்பவங்கள் பூங்கா, சாலை மற்றும் பேருந்து ஆகியவற்றில் நடந்துள்ளது. போதிய ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், பூங்காக்கள், சாலைகள், பேருந்துகள், மெட்ரோ நிலையங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற பொது இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது.

பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சட்ட அமலாக்கம் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகளின் தரப்பில் உள்ள முறையான தோல்வியை இச்சம்பவங்கள் அப்பட்டமாக உணர்த்துகின்றன. நடவடிக்கை இல்லாத கவலை மட்டும் போதாது, இந்த சம்பவங்களுக்கு காவல்துறையின் பொறுப்புக்கூறல்தான் தேவை” என்று தெரிவித்தது.

ஆஸ்தா குஞ்ச் சம்பவத்தில், லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகார் அளித்தும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது செய்திகள் மூலம் தெரியவந்ததைக் குறிப்பிட்ட அமர்வு, காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், காவல்துறையிடம் முறையான விளக்கத்தையும் கோரியுள்ளது.

SCROLL FOR NEXT