ஹரீஷ் ராணா
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கோமாவில் உள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹரீஷ் ராணாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளின் உதவியுடன் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
சுவாசிக்க tracheostomy குழாயும், உணவு அளிக்க gastrojejunostomy குழாயும் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே அவர் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஹரீஷ் ராணா ஒருகாலத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த திறமையான 20 வயது இளைஞர். ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்ததால் அவருக்கு மூளை காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், அந்த மூளை காயம் அவரை நிரந்தரமாக ஒரு தாவரத்தைப் போல வாழ வைத்துவிட்டது. தூக்கம்-விழிப்பு சுழற்சியை அவர் உணர்கிறார். ஆனால் முழுமையாக பிறரின் உதவியையே சார்ந்து இருக்கிறார். 13 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
‘மனிதன் வாழ்க்கையை ஏற்கிறானா என்று கடவுள் கேட்பதில்லை; அதை நீ ஏற்க வேண்டியது தான்’ - இது அமெரிக்க மதபோதகர் ஹென்றி வார்ட் பீச்சரின் வார்த்தைகள். ஒருவர் மரணத்தைத் தேர்வு செய்யலாமா என்று நீதிமன்றத்திடம் கேட்கப்படும் போது இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதற்கு இரண்டு அடிப்படைகள் இருக்க வேண்டும். 1. அந்த நடவடிக்கை மருத்துவ சிகிச்சை (Medical Treatment) எனக் கருதப்பட வேண்டும். 2. அது நோயாளியின் சிறந்த நலனுக்கானதாக (Best Interests of the Patient) இருக்க வேண்டும். இது ஹரீஷ் ராணாவுக்கு பொருந்துவதால், அவரது பெற்றோரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘‘இதுபோன்ற ஒரு நோயாளியின் நிலையைப் பற்றி இரண்டு மருத்துவ குழுக்களின் கருத்தை ஆய்வு செய்த பிறகு அவரை கருணைக் கொலை செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.