புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி மற்றும் தலைநகர வலையப் (என்சிஆர்) பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசுகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையைத் தளர்த்தக் கோரி, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே அமர்வு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், தீபாவளியை முன்னிட்டு நவ.7, 8 ஆகிய தேதிகளில் மட்டும், சிஎஸ்ஐஆர் (CSIR), நீரி (NEERI) அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்
படி, நவ.7-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், நவ. 8-ம் தேதிகாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்.
மேலும், நவம்பர் 4 முதல் 6-ம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளனர். ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி மறுத்துள்ளனர்.
அதேநேரம் அங்கீகரிக்கப்படாத பசுமைப் பட்டாசுகள், பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகள் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தளர்வு நவ.8-ம் தேதியுடன் முடிவடையும் என்றும், நவ.9-ம் தேதி முதல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பட்டாசுகளுக்கான முழுத் தடை மீண்டும் அமலுக்கு வரும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.