கோப்புப்படம்

 
இந்தியா

கோடை வெப்பத்தை தணித்து டெல்லியை குளிர்வித்த திடீர் மழை

வேட்டையன்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மழை பொழிவு பதிவானது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக அங்குள்ள மக்களை வாட்டி வந்த கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.

மழையுடன் காற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் வெப்பநிலை அங்கு சரிந்துள்ளது. இன்று காலை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழைப் பொழிவு லேசானதாக ஆரம்பமானது. அதைத்தொடர்ந்து திடீரென வானிலை நிலவரம் மாறியது. வானில் கருமேகங்கள் சூழ மழை பொழிவு தொடர்ந்தது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் டெல்லியில் பதிவானது. கடந்த திங்கட்கிழமை அன்று 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது. டெல்லியில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருந்தது. இந்தச் சூழலில் மேற்கு சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்று அங்கு மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை காரணமாக டெல்லியில் வெப்பநிலை மாறியுள்ளது. இதனால் அங்கு இன்று 27 முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என தகவல். மழைப் பொழிவு தொடரவும் வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மழை காரணமாக டெல்லியில் காற்றின் தரமும் சற்று மேம்பட்டுள்ளது.

மத்திய பாகிஸ்தான் மற்றும் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளில் நிலவும் சூறாவளி சுழற்சி வடகிழக்கு இந்திய பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் தான் இது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT