புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று ஜென் ஸீ இளைஞர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக் போராட்டம் நடத்திய மாணவர்களில் 5 பேரை டெல்லியில் ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நியாயமான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் அடக்குமுறையைக் கையாண்டனர். மாணவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.
போராட்டம் முடிந்த பின்னரும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் தொடர்பான அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் உண்மையான கவலை, கோரிக்கைகளை புரிந்துகொள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தவறிவிட்டனர். போராட்டத்தின்போது அவர்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர், பயமுறுத்தப்பட்டனர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டம் சரிதான். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை்யும் நாட்டின் எதிர்காலத்தையும், கொள்கைகளையும் பாதுகாத்துள்ளனர். குறைபாடுகள் நிறைந்த, சரிந்து கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பாகத் திகழும் இந்திய கல்விமுறை குறித்து குறை கூறுவது குற்றமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.