நிலநடுக்க |பிரதிநிதித்துவப் படம்

 
இந்தியா

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிரொலித்த அதிர்வு; மக்கள் பீதி!

மோகன் கணபதி

கொல்கத்தா: வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வலுவாக உணரப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடுமையான நில அதிர்வாக உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “டாக்காவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நர்சிங்டி-க்கு தென் மேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இன்று காலை 10.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பிற பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் காலை 10.10 மணி அளவில் நில அதிர்வு சில வினாடிகளுக்கு உணரப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இது குறித்த வீடியோக்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் கூச் பெஹார், தக்ஷின், உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. குவாஹாட்டி, அகர்தலா, ஷில்லாங் உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு வலிமையாக உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் டாக்காவில், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிறிது பாதிக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

SCROLL FOR NEXT