புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 'வக்பு தினம்' நிகழ்வின் போது 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் வக்பு தினம் நிகழ்வு அம்மாநில வக்பு வாரியம் சார்பில் நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல இமாம்களும் பிற மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களும் ஒலிக்கப்பட்டன.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை தாங்கிய இந்த வக்பு தின நிகழ்வில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட்டதற்கு ஜம்மு - காஷ்மீர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான 'முத்தஹிதா மஜ்லிஸ்-எ-உலமா' கடுமையாக ஆட்சேபித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், ’அல்லாஹ்வுக்கு இணையாக யாரையும் கருதுவதோ அல்லது எந்தவொரு நபர், பொருள், நிலம் அல்லது படைப்புக்கு இறைவனின் அந்தஸ்தை வழங்குவதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில், இஸ்லாம் ஏகத்துவத்தை (ஒரே இறைவனை வணங்குதல்) வலியுறுத்துகிறது. தாய்நாட்டின் மீது அன்பு செலுத்துவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஆனால், நாட்டை நேசிப்பதற்கும், அதை வழிபடுவதற்கும் அல்லது அதற்கு இறைவனின் அந்தஸ்தை வழங்குவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது.
இது ஓர் அதிகாரப்பூர்வ நிகழ்வு என்பதால் மட்டுமே 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவது சட்டப்படி கட்டாயமான ஒன்றல்ல. அது விருப்பத்துக்கு உட்பட்டதே.
இருப்பினும், காஷ்மீரி முஸ்லிம்களின் அடிப்படை மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரியம் இவ்வாறு செயல்பட்டுள்ளது. இது அந்த மக்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தியுள்ளது.
இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஏற்கெனவே 'வந்தே மாதரம்' குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், மத ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் இதைக் கட்டாயமாக்குவதை அந்த வாரியம் கடுமையாக எதிர்க்கிறது.
முஸ்லிம்களின் மதச் சொத்துகளையும் அவற்றின் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட வக்பு வாரியமே, இத்தகைய நிகழ்வில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அனுமதித்தது மிகவும் வருந்தத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் வக்பு வாரிய நிகழ்வில் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள் குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, தம்முன் ஒலிக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்த நின்றமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தாங்கள் அதில் பங்கேற்றதற்காக பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளனர். இதற்காக அவர்கள், தங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவும், தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் இஸ்லாத்தின் 'கலிமா'வை ஓதினர்.