இந்தியா

கன்றுடன் திருடப்பட்ட எருமை 18 கி.மீ நடந்து உரிமையாளர் வீடு சேர்ந்த சம்பவம்!

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கன்றுடன் திருடப்பட்ட எருமை 18 கி.மீ நடந்து உரிமையாளர் வீடு திரும்பியுள்ளது. திருடர்களை விஞ்சிய விசுவாசமான இந்த சம்பவத்தில் திருடர் ஒருவர் கைதாகி உள்ளார்.

அம்மாநிலத்தில் எருமை திருட்டு தொடர்பான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, ஷிவ்புரி மாவட்டத்தில் மாதா கணேஷ்கேடா என்ற ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.

அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள ஜான்டி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் லோதி என்பவர் கன்றுடன் ஒரு எருமையை வளர்த்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு தனது எருமைகளை, மாதா கணேஷ்கேடாவில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டு வைத்திருந்தார்.

கடந்த 5-ம் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து, அந்த எருமையையும் அதன் கன்றையும் திருடிச் சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த திருடர்களுடன், தனது கன்றுடன் எருமையும் அமைதியாக 18 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது.

ஆனால், அந்த திருடர்கள் தற்செயலாக அந்த எருமைகளின் உரிமையாளரான அரவிந்தின் ஜாண்டி கிராமம் வழியாகச் சென்றனர். தனது கிராமத்தின் எல்லையைக் கண்டவுடன், அந்த எருமை செய்த ஒரு செயலால் திருடர்களின் திட்டங்கள் அனைத்தும் தகர்ந்தன.

ஜான்டி கிராமத்தை அடைந்ததும், அதுவரை அமைதியாக வந்த எருமைகள், திடீரென திருடர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடியது. அவை நேராக தனது உரிமையாளர் அரவிந்த் லோதியின் வீட்டில், வழக்கமாக கட்டப்படும் இடத்திற்கே சென்றது.

அப்போது அங்கிருந்த அரவிந்த் லோதியிடம் வந்த திருடர்களில் ஒருவன், ’இந்த எருமைகள் என்னுடையது, தவறுதலாக இங்கே வந்துவிட்டன’ என்று கூறினான். இதைக் கேட்டு சந்தேகம் அடைந்த அரவிந்த், தனது மாமனார் வீட்டிற்கு போன் செய்து பேசியுள்ளார்.

அப்போது, அவர் கன்றுடன எருமை திருடுப்போன சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து, அக்கம் பக்கம் இருந்த கிராமவாசிகளை அரவிந்த் போன் செய்து உதவிக்கு அழைத்துள்ளார்.

உடனடியாகக் கூடிவிட்ட கிராமவாசிகள் அங்கிருந்த ஒரு திருடனைப் பிடித்தனர். மற்றொரு திருடன் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட திருடன், விசாரணையின் போது தான் செய்த திருட்டை ஒப்புக்கொண்டார். தற்போது, இந்த ’புத்திசாலி எருமை’ ம.பி மாநில காவல்துறையுடன் அந்தப் பகுதி முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT