புதுடெல்லி: அரசு விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடலாம். அதன்பின் வந்தே மாதரம் தேசியப் பாடலும், தேசிய கீதமும் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தை இசைப்பது, பாடுவது தொடர்பான விதிகளை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. எந்தெந்த நிகழ்வுகளில் தேசியப் பாடல், தேசியகீதம் கட்டாயம் பாடப்பட, இசைக்கப்பட வேண்டும் என்பதற்கான முழுமையான பட்டியல் அந்த உத்தரவில் இடம்பெற்றுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசு சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாக்கள், அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ விழாக்களுக்கு குடியரசுத் தலைவர் வரும்போதும், அங்கிருந்து புறப்படும் போதும் தேசியப் பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பும் பின்பும் தேசியப் பாடல் பாட வேண்டியது கட்டாயம்.
ஆளுநர்கள், துணை நிலைஆளுநர்கள் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள் நடக்கும் அதிகாரப்பூர்வ அரசு விழாக்களுக்கு வரும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப் பாடல் கட்டாயமாக பாடப்பட வேண்டும். அணிவகுப்புக்கு தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் பாடுவது அவசியம்.தேசியப் பாடல், தேசிய கீதத்தைப் பாடும் போதோ இசைக்கும் போதோ, அவற்றின் சரியான உரை/வரி வடிவம், உச்சரிப்பை துல்லியமாக பின்பற்ற வேண்டும்.
மாநிலப் பாடல் விதிமுறைகள்: சில மாநிலங்களில், தேசிய கீதம்/தேசியப் பாடலுடன் சேர்த்து மாநிலப் பாடலும் பாடப்படுகிறது. இந்தச் சூழலில் மாநிலப் பாடல் முதலில் பாடப்படலாம். இதைத் தொடர்ந்து வந்தே மாதரம் தேசியப் பாடலும் தேசிய கீதமும் ஒன்றாகவே இசைக்கப்பட வேண்டும். மேலும் முதலில் தேசியப் பாடல், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜனவரி 28-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தேசியப் பாடலைப் பாடுவதற்கான முதல் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வழங்கியது. அதன்படி, குடியரசுத் தலைவரின் வருகை, மூவர்ணக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆளுநர்களின் உரைகள் போன்ற அதிகாரப்பூர்வ விழாக்களில், 3 நிமிடங்கள் 10 விநாடிகள் கால அளவு கொண்ட அதன் 6 சரணங்கள் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேசியப் பாடல் பாடப்படும் போது, அங்கிருக்கும் அவையினர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ‘வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தாய்நாட்டுக்குச் செலுத்தும் வணக்கமாகவும், உரியமரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் கூட்டாகப் பாடும் வரை, மக்கள் இந்த தேசியப்பாடலை பாட எந்த தடையும்இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜனவரி 24, 1950 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின்படி, ‘ஜன கண மன' என்று அறியப்படும் சொற்களும் இசையும் கொண்ட பாடலே இந்தியாவின் தேசிய கீதம் என்று முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கைக் கொண்ட ‘வந்தே மாதரம்' பாடலும் ‘ஜன கண மன'வுக்கு இணையாகக் கவுரவிக்கப்பட வேண்டும் என்றும், அதற்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.