இந்தியா

பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள்: சிஜேபி-க்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: “நீங்கள் (சிஜேபியினர்) விரும்பும் எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “எங்கள் இளம் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பு. உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ - இவ்விரண்டில் நீங்கள் விரும்பும் இடத்தில் - பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த விவகாரத்தில் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.

பேச்சுவார்த்தையின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் நானும் உடனிருப்போம். படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வை நோக்கி முன்னேறுவோம். மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை இருக்கும். எனவே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு நான் விடுக்கும் பணிவான வேண்டுகோள் என்னவென்றால், போராட்டத்துக்குக் காரணமான பிரச்சினை மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வெளிப்படையான மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

மாணவர் சமூகம், இளைஞர் சமூகம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு தீர்வைக் காண முன்வருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் நலனே முதன்மையானது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக எடுத்துரைதுள்ளதை நீங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். மாணவர்களின் நலனைப் பாதுகாக்க அரசு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்திய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீதான வழக்குகள் விரைவாகவும், உறுதியாகவும் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மிக முக்கிய முடிவை பிரதமர் எடுத்துள்ளார். எனவே, பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் ஒருமுறை உங்களை பணிவுடன் அழைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT